சந்திரயான்-3: சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ
சந்திரயான் 3 விண்கலமானது கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பூமியின் புவியீர்ப்புவிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக சந்திரனின் சுற்றுப்பட்டப்பாதையில் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு, நிலவைச் சுற்றி வரும் அதன் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது குறித்து தங்களது அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கத்திலும் ட்வீட் செய்திருக்கிறது இஸ்ரோ. இதன் பிறகு, மூன்று சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ. அடுத்த சுற்றுவட்டப்பாதை உயரக் குறைப்பு நடவடிக்கையானது ஆகஸ்ட் 9-ம் தேதியன்று நண்பகல் 1 முதல் 2 மணிக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் தங்களுடைய X பதிவில் குறிப்பிட்டிருக்கிறது இஸ்ரோ.
சந்திரயான் 3: அடுத்த என்ன?
கொஞ்சம் கொஞ்சமாக சந்திரயான் 3 சுற்றுவட்டப்பாதையின் உயரம் குறைக்கப்பட்டு, 100கிமீ சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும், அதிலிருந்து லேண்டர் மற்றும் ரோவர் மாட்யூல் மட்டும் தனியே பிரிந்து நிலவில் தரையிறக்கப்படும். இந்த நடவடிக்கையானது ஆகஸ்ட் 23-ம் தேதி மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. தரையிறக்குவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் அமையாத பட்சத்தில், இந்த நடவடிக்கை அடுத்த மாதம் தள்ளி வைக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. நிலவில் மென் தரையிறக்கத்தை சாத்தியப்படுத்துவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு இந்தத் திட்டத்தை வடிவமைத்திருக்கிறது இஸ்ரோ. சந்திரயான் 2 திட்டத்தின் மூலமே மென்தரையிறக்கத்தை சாத்தியப்படுத்த முனைந்தது இஸ்ரோ. அந்தத் திட்டம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாத தற்போதைய சந்திரயான் 3 திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்துடன் சில அறிவியல் பரிசோதனைகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கின்றன.