சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு 'சிவ சக்தி' என்று பெயர்: சர்வதேச வானியல் ஒன்றியம் ஒப்புதல்
சர்வதேச வானியல் ஒன்றியம்(IAU) ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு அதிகாரப்பூர்வமாக "சிவ சக்தி" என்று பெயரிடப்பட்டது. சந்திரயான்-3 தரையிறங்கிய தளம் "சிவ சக்தி" என்று அழைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு இதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. சந்திரயான்-3 தரையிறங்கிய தளத்தின் "ஸ்டேடியோ சிவசக்தி" என்ற பெயர் பாரிஸை தளமாகக் கொண்ட IAU ஆல் மார்ச் 19 அன்று அங்கீகரிக்கப்பட்டது. இது குறித்த தகவல், IAU ஆல் அங்கீகரிக்கப்பட்ட கிரகங்களின் பெயர்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் கோள்களின் பெயரிடல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இயற்கையின் இருமையை குறிக்கும் சொல் 'சிவசக்தி'
"சிவசக்தி" என்ற பெயரின் தோற்றம் குறித்து பேசியிருக்கும் அந்த அரசிதழில், "இந்திய புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கலவையான வார்த்தை இதுவாகும். சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய தளத்தின் பெயர் ஆண்பால் ('சிவன்') மற்றும் பெண்பால் ('சக்தி') என்ற இயற்கையின் இருமையை குறிக்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்திற்கு அருகே சந்திரயான் 3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி புள்ளி என்று பெயரிடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு அறிவித்திருந்தார். ஆகஸ்ட் 26, 2023 அன்று பெங்களூருவில் உள்ள இஸ்ரோ டெலிமெட்ரி டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க் மிஷன் கண்ட்ரோல் வளாகத்தில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.