அனைத்து மொபைல்களிலும் FM ரேடியோ வசதி.. மத்திய அரசு புதிய உத்தரவு!
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வருவதற்கு முன்னும், அவை வந்த சில ஆண்டுகள் வரையிலும், எல்லா ஃபோன்களிலும் FM ரேடியோ இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புதிதாக வெளியாகும் மொபைல்களில் ரேடியோ வசதி அளிக்கப்படுவதில்லை. இதனைத் தொடர்ந்து மொபைல் தயாரிப்பு நிறுனங்களுக்கு மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்திய செல்லுலார் மற்றும் மின்சாதன கூட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான தயாரிப்புக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளிடம் மொபைல்போன்களில் ரேடியோ வசதியை கட்டாயமாக அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அடுத்து வெளியாகும் போன்களில் ரேடியோ ரீசிவரை பயன்படுத்தியிருக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் ரேடியோவை ஒரு வசதியாகவாவது மொபைலில் வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறது.
ஏன் ரேடியோ வசதி தேவை?
யூடியூப், ஓடிடி என பொழுதுபோக்கு ஆப்ஷன்கள் அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் ரேடியோவின் தேவை பயனர்களுக்கு தேவையில்லை என்ற எண்ணத்தில் மொபைல் நிறுவனங்கள் அந்த வசதியை நிறுத்தியிருக்கலாம். ஆனால், பொழுதுபோக்கைக் கடந்து நாட்டில் தொலைத்தொடர்பு வசதிகள் கூட இல்லாத இடங்களிலும், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்க முடியாத இடங்களிலும் கூட ரேடியோவின் மூலம் அரசால் மக்களுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இயற்கைப் பேரிடர் காலங்கள் மற்றும் அவசர காலங்களிலும் கூட, தேவையான தகவல்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க ரேடியோவே பயன்படுத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் கூட அது சார்ந்த தகவல்களை ரேடியோ மூலமே அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்திருக்கிறது அரசு. எனவே தான் FM ரேடியோ வசதியை அனைத்து மொபைல்களிலும் வழங்க மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.