செவ்வாய் கிரகத்திற்குத் திட்டமிட்டு ராணுவத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம்; ஜிபிஎஸ் இல்லா ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இந்திய மாணவர்கள்
செய்தி முன்னோட்டம்
பிட்ஸ் ஹைதராபாத் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் நமன் காஸ்லிவால் மற்றும் சிவ் பாட்டீல் ஆகியோர் பீஜான் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மூலம் ஜிபிஎஸ் சிக்னல்கள் இல்லாத சூழலிலும் இயங்கும் ட்ரோன் வழிகாட்டுதல் அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் செவ்வாய் கிரகத்தில் ஜிபிஎஸ் வசதி இல்லாததால் அங்கு ட்ரோன்களை இயக்குவதற்காக இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் வடிவமைக்கத் தொடங்கினர். பின்னர் இந்திய ராணுவ அதிகாரியின் ஆலோசனையின் பேரில், எதிரிகளால் சிக்னல்கள் ஜாம் செய்யப்படும் எல்லைப் பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை மாற்றியமைத்து மேம்படுத்தினர்.
ஏஐ தொழில்நுட்பம்
கேமராக்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் துல்லியமாக இயங்கும் அமைப்பு
பீஜான் தானியங்கி வழிகாட்டுதல் சாதனம் (Beijan Autonomous Navigation Module) ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் வெளிப்புறக் காட்சிகளை சேகரித்து செயல்படுகிறது.
இந்த காட்சித் தரவுகளை ட்ரோனின் கணினி ஏஐ மூலமாக பகுப்பாய்வு செய்து, நகரும் திசை மற்றும் பாதையைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது.
இதற்காக சொந்தமாக விஷுவல் நேவிகேஷன் மென்பொருளை உருவாக்கி, அதை சிறிய மற்றும் குறைந்த எடைகொண்ட ஹார்டுவேர் சாதனங்களில் பொருத்தும் வகையில் அம்மாணவர்கள் வெற்றிகரமாக வடிவமைத்துள்ளனர்.
சோதனை வெற்றி
பொக்ரான் மற்றும் லே ராணுவப் பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட சோதனைகள்
செயல்வடிவ மாதிரியாக இருந்த இந்த தொழில்நுட்பத்தை கடுமையான போர்க்கள சூழலுக்கு ஏற்ப நிலைப்படுத்துவதே மாணவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
லே மற்றும் பொக்ரான் போன்ற கடினமான தட்பவெப்பநிலை கொண்ட எல்லைப் பகுதிகளில் இந்த சாதனம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு ராணுவ அதிகாரிகளிடம் செய்து காட்டப்பட்டது.
ராணுவத்தின் 8 வெவ்வேறு பிரிவுகள் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விருப்பக் கடிதம் அளித்துள்ளதோடு, ஒவ்வொரு பிளாட்டூனிலும் 3 முதல் 4 சாதனங்கள் தேவைப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி இலக்கு
ரூ. 1.7 கோடி நிதி திரட்டல் மற்றும் அடுத்தகட்ட உற்பத்தி இலக்குகள்
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க மென்பொருள் மற்றும் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட இத் தொழில்நுட்பத்திற்கு ஏஜேவிசி நிதியம் மூலம் ரூ. 1.7 கோடி முதலீடு கிடைத்துள்ளது.
மேலும் ஐஐடி காந்திநகர் வழங்கிய ரூ. 25 லட்சம் மானியமும் இவர்களின் ஆராய்ச்சிக்கு உதவியாக இருந்தது.
தற்போது ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சாதனங்களை முழுமையான ராணுவ பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகளில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.