அழியாத முத்திரை பதித்தவர்; ரத்தன் டாடாவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் புகழாரம்
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுடனான தனது உறவை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ரத்தன் டாடா குறித்து லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், அவரது நோக்கம் மற்றும் மனித குலத்திற்கான சேவையின் வலுவான உணர்வுகளால் அவர் எப்போதும் ஈர்க்கப்பட்டார் என்று குறிப்பிட்டார். அவரை ஒரு தொலைநோக்கு பார்வையாளராக வர்ணித்த பில் கேட்ஸ், "வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு மூலம் இந்தியாவிலும், உலகிலும் அழியாத முத்திரையை பதித்த தலைவர்" என்று கூறினார். மேலும், "மக்கள் ஆரோக்கியமான, வளமான வாழ்க்கையை வாழ உதவும் பல முயற்சிகளில் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். டாடாவின் உதாரணம் வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்." என்று குறிப்பிட்டார்.
முழு அரசு மரியாதையுடன் ரத்தன் டாடா உடல் தகனம்
வியாழன் (அக்டோபர் 10) முழுவதும், தலைவர்கள் மற்றும் வணிகப் பிரமுகர்கள் டாடாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக மும்பையின் தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் கூடினர். மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்திய நிலையில், மகாராஷ்டிரா அரசு அவரது உடலை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்தது. டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தை 1991 முதல் 2012 வரை ரத்தன் டாடா வழிநடத்தினார். 1991இல் இந்தியா பொருளாதார சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டபோது, அதை அடியொற்றி டாடா குழுமத்தின் வளர்ச்சி பயணத்தை ரத்தன் டாடா மேற்கொண்டார். இதன் மூலம் ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ், குழு உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட $100 பில்லியன் குழுமமாக உருவானது குறிப்பிடத்தக்கது.