மீண்டும் இந்தியாவில் வெளியானது 'BGMI' ஸ்மார்ட்போன் கேம்!
கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு BGMI (Battlegrounds Mobile India) ஸ்மார்ட்போன் விளையாட்டை இந்தியாவில் மறுவெளியீடு செய்திருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களிலும், BGMI-ன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திலும் இந்த கேமை தற்போது பயனர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்தியா பயனர்களின் இருப்பிடம், ஆடியோ மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாவும், சீன சர்வர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறி இந்தியாவிற்கென பிரத்தியேகமாக கிராஃப்டான் நிறுவனம் வெளியிட்ட BGMI விளையாட்டை இந்தியாவில் தடை செய்தது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து தற்போது மூன்று மாத காலத்திற்கு மட்டும் இந்தியாவில் செயல்பட தற்காலிக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மூன்று மாத காலத்தில் அதன் நடவடிக்கைகளைப் பொறுத்து இறுதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வெளியானது BGMI:
முன்னர் வெளியிடப்பட்ட பழைய வெர்ஷனை மீண்டும் வெளியிடாமல், அப்டேட் செய்யப்பட்ட புதிய BGMI வெர்ஷனை தற்போது இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது கிராஃப்டான் நிறுவனம். தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டாலும், இந்தியாவில் இருக்கும் அந்நிறுவனத்தின் சர்வர்கள் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. எனவே, இந்த விளையாட்டை விளையாட கேமர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். இந்தியாவில் மீண்டும் செயல்பட அனுமதி அளித்ததற்கு மத்திய அரசுக்கும், பொறுமையாக இருந்ததற்காக இந்திய ஸ்மார்ட்போன் கேமர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் கிராப்டான் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ சான் ஹ்யூனில் சோ. இந்த கேமை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து, BGMI-யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் IOS இரண்டு இயங்குதளங்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.