'ROG போன் 8' குறித்த டீசரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட அசூஸ்
நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின்னர் தங்களுடைய அடுத்த ஸ்மார்ட்போனான ROG போன் 8-ன் டீசர் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறது அசூஸ் (Asus). உலகளவில் சிறந்த செயல்திறன் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன் சீரிஸ்களுள் ஒன்று அசூஸின் ROG ஸ்மார்ட்போன் சீரிஸ். அந்த வரிசையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் விரைவில் வெளியாகவிருக்கிறது ROG போன் 8. அசூஸ் நிறுவனம் பகிர்ந்திருக்கும் டீசரில், பென்டகன் வடிவ கேமரா மாடியூலில், மூன்று கேமராக்கள் மற்றும் ஒரு பிளாஷ்லைட் இடம்பெற்றிருக்கிறது. மேலும், பக்கவாட்டில் ஒரு டைப்-சி போர்ட் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் ROG போன் 7-ன் தோற்றத்தை சற்று ஒத்திருக்கிறது புதிய அசூஸ் ROG போன் 8-ன் டீசர் தோற்றம்.
அசூஸ் ROG போன் 8:
வழக்கம் போல மூன்று வேரியன்ட்களாக இந்த ROG போன் 8 சீரிஸையும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அசூஸ். அதன்படி, ROG போன் 8, ROG போன் 8 ப்ரோ மற்றும் ROG போன் 8 அல்டிமேட் ஆகிய மூன்று மாடல்களை இந்த சீரிஸின் கீழ் நாம் எதிர்பார்க்கலாம். இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காமின் ப்ளாக்ஷிப் ப்ராசஸரான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸரைப் பயன்படுத்தவிருப்பதை உறுதி செய்திருக்கிறது அசூஸ். இந்தப் புதிய குவால்காம் ப்ராசஸரானது AI தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதால், புதிய ROG போன் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் AI கருவிகள் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.