Apple சேவைகள் மற்றும் NSA நெட்வொர்க் திடீர் முடக்கம்: சைபர் தாக்குதலா அல்லது தொழில்நுட்பக் கோளாறா?
செய்தி முன்னோட்டம்
உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆப்பிள் பயனர்கள் செவ்வாய்க்கிழமை கடும் சேவைத் தடையை எதிர்கொண்டனர். ஐ-கிளவுட், ஆப் ஸ்டோர், ஆப்பிள் பே மற்றும் ஆப்பிள் சப்போர்ட் உள்ளிட்ட முக்கியச் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதே நாளில், அமெரிக்காவின் ரகசியமான தேசிய பாதுகாப்பு முகமையின் தகவல் தொடர்பு நெட்வொர்க்கும் தற்காலிகமாக முடங்கியது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிறுவனம் விளக்கம்
ஆப்பிள் சேவைகள் முடங்கியது ஏன்?
செவ்வாய்க்கிழமை நண்பகலுக்குப் பிறகு டவுன்டிடெக்டர் தளத்தில் ஆப்பிள் சேவைகள் குறித்த புகார்கள் குவியத் தொடங்கின.
பயனர்களால் தங்களது கணக்குகளில் உள்நுழைய முடியவில்லை; புதிய சாதனங்களை ஆக்டிவேட் செய்வதிலும், ஆப்பிள் வாலட் மற்றும் ஆப்பிள் மியூசிக் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி பிரேசில், கிரீஸ், லாட்வியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தப் பாதிப்பு உணரப்பட்டது.
இந்தத் தடையானது சைபர் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும், நிறுவனத்தின் உள் மென்பொருள் புதுப்பிப்பு காரணமாகவே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் ஆப்பிள் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
பெரும்பாலான சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NSA
அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமையின் ரகசிய நெட்வொர்க் பாதிப்பு
மற்றொரு தனிச் சம்பவத்தில், அமெரிக்காவின் முக்கிய உளவு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) உள் தகவல் தொடர்பு வலையமைப்பான 'NSA Net' செவ்வாய்க்கிழமை தற்காலிகமாகச் செயலிழந்தது.
ரகசியத் தகவல்களைப் பரிமாறப் பயன்படும் இந்த நெட்வொர்க், வழக்கமான பராமரிப்புப் பணிகளின் போது முடங்கியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடையால் அவசரப் பணியில் இல்லாத ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கான நேரம் மாற்றியமைக்கப்பட்டது. இருப்பினும், தேசியப் பாதுகாப்பை காக்கும் முக்கிய செயல்பாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என NSA உறுதிப்படுத்தியுள்ளது.
மால்வேர்
178 நிறுவனங்களின் இணையதளங்களில் 'மால்வேர்' ஊடுருவல்
ஆப்பிள் மற்றும் NSA முடக்கங்களுக்கு மத்தியில், உலகளாவிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள தொடர் கோளாறுகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
'ஆப்டிமைஸ்லி' என்ற இணையதள மேம்பாட்டுத் தளம் வழியாக ஜூம், எச்.எஸ்.பி.சி, சி.என்.என், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் ஐகியா உள்ளிட்ட 178 நிறுவனங்களின் இணையதளங்களில் தீங்கிழைக்கும் ஜாவாஸ்கிரிப்ட் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஹெல்ம் எச்சரித்துள்ளார்.
இது கிரிப்டோகரன்சி, பேமெண்ட் விவரங்கள் மற்றும் ஐபோன் தரவுகளைத் திருடும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை மேரியட் இன்டர்நேஷனல் ஹோட்டல் முன்பதிவு சேவைகளிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
முன்னதாக திங்கட்கிழமை யுனைடெட் ஏர்லைன்ஸ் சேவை 90 நிமிடங்களுக்கு மேல் முடங்கியதுடன், முன்னணி அமெரிக்க வங்கிகளின் ஆன்லைன் சேவைகளும் பாதிக்கப்பட்டன. கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் சேவைகளும் உலகளவில் முடங்கியது குறிப்பிடத்தக்கது.