ஆட்குறைப்பை அடுத்து, ஊழியர்களின் ஸ்டாக் ரிவார்டுகளை குறைக்க அமேசான் திட்டம்
செய்தி முன்னோட்டம்
சமீப காலமாக அமேசான் நிறுவனம் ஆட்குறைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்கவே இந்த நடவடிக்கை என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஆட்குறைப்புகளில் தப்பி பிழைத்த ஊழியர்களின் ரிவார்டுகளைக் குறைக்க திட்டமிடுவதாக ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதன்படி, "RSU என்று குறிப்பிடப்படும், கட்டுப்படுத்தப்பட்ட ஸ்டாக் யூனிட்ஸ் சம்மந்தப்பட்ட ரிவார்டுகளை ஒரு சிறிய அளவு குறைக்க முடிவு செய்துள்ளோம்" என்று அமேசான் செய்தித் தொடர்பாளர், குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த ரிவார்டுகள் குறைப்பு நடவடிக்கை எப்போது நடைபெறும், எவ்வளவு காலம் என்பது பற்றிய தகவல் இல்லை.
அமேசான்
தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள்
அதிகரித்து வரும் செலவுகளை சமாளிக்க, அமேசான் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம், கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள தன்னுடைய நிறுவன வளாகத்தை விற்பனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல, வியாபாரத்தை அதிகரிக்க, பணியாளர்களை வாரத்தில் 3 நாளாவது, கண்டிப்பாக அலுவலகத்திற்கு வர வேண்டும் எனவும் அமேசான் உத்தரவிட்டிருந்தது.
எனினும், முதற்கட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையை, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது அமேசான். கிட்டத்தட்ட 18,000 பணியாட்களை நீக்கியது.
தொடர்ந்து, சென்ற மார்ச் மாதம், விளம்பரத்துறை, AWS போன்ற பிரிவுகளில் இருந்து 9000 பேரை நீக்கியது.
இதனை தொடர்ந்து சமீபத்தில், தனது கேமிங் துறையிலிருந்தும், 100 பேரை பணிநீக்கம் செய்து அறிவித்தது.
இன்னும், அமேசான் என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள போகிறதோ என, அந்நிறுவனத்தின் ஊழியர்கள் நித்தம் கவலையில் உள்ளனர்.