Page Loader
ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?
ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பங்கள்

ஆன்லைன் மோசடிகளில் பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம்.. தற்காத்துக் கொள்வது எப்படி?

எழுதியவர் Prasanna Venkatesh
May 24, 2023
11:07 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதைத் தொடர்ந்து அதனை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமல்ல ஆன்லைன் மோசடி செயல்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேறொரு நபரைப் போல சித்தரித்து வடக்கு சீனைவைச் சேர்ந்த ஒருவரிடம் 5 கோடி ரூபாய் பணம் பறித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. வடக்கு சீனாவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரிடம், அவருடைய நண்பரைப் போலப் பேசி, வீடியோ காலில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரது நண்பரைப் போலவே உருவத்தை சித்தரித்து தங்களுடைய வங்கிக் கணக்கிற்கு இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாயை கடன் பெறுவதைப் போல பெற்று ஏமாற்றியிருக்கின்றனர். வீடியோ காலில் பேசியது வேறு நபர் என்பதைக் கண்டறிய முடியாத அளவிற்கு மிகவும் துல்லியமாக இருந்திருக்கிறது அந்த AI தொழில்நுட்பம்.

ஆன்லைன் மோசடி

இந்தியாவிலும் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடிகள்: 

இந்தியாவிலும் ஆடியோ காலில் AI தொழில்நுட்பங்கள் கொண்டு தெரிந்தவர்கள் போலப் பேசி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருவர் பேசும் 2 நொடி ஆடியோ இருந்தால் போதும், அதனைப் போலவே குரலை உருவாக்கும் அளவிற்கு AI தொழில்நுட்பங்களின் திறன் வளர்ந்திருக்கிறது. மேற்கூறிய மோசடி சம்பவங்களின் வெற்றி சதவிகிதத்தை அதிகரிப்பது AI தொழில்நுட்பங்களே. இந்த நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதனால், அது குறித்த தெளிந்த பார்வை இருப்பவர்களால் கூட, இது உண்மையா பொய்யா எனக் கண்டறியா முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தெரிந்த நபர்களாக இருந்தாலும், ஒன்றுக்கு பல வழிகளில் உறுதி செய்த பிறகு ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவது சிறந்தது.