பலே கண்டுபிடிப்பா இருக்கே! பசியைக் கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்யும் செயற்கை நுண்ணறிவு சாதனம்
செய்தி முன்னோட்டம்
மங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான சோஹன் எம். ராய், ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனத்தை உருவாக்கியுள்ளார். இது பயனருக்குப் பசிக்கும்போது தானாகவே உணவை ஆர்டர் செய்யும் திறன் கொண்டது. MOM (Meal Ordering Module) என்று பெயரிடப்பட்ட இந்தச் சாதனம், பெல்ட்டில் அணியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பசி உணர்வின் அளவைக் கண்டறிந்து, அதற்கேற்ப ஜொமாட்டோ (Zomato) மூலம் உணவு ஆர்டர்களைப் பதிவு செய்ய, இது ஆந்த்ரோபிக்கின் கிளாட் (Anthropic's Claude AI) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.
செயல்பாடு
சாதனம் செயல்படும் விதம்
இந்த MOM சாதனம், ஒரு ஸ்டெதஸ்கோப் (Stethoscope) மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் வயிற்றிலிருந்து எழும் குடல் சத்தம் (Stomach Growling) அல்லது குடலிரைச்சல் சத்தத்தைக் கண்டறிகிறது. இந்தச் சத்தம் கேட்டவுடன், அது உடனடியாக ஜொமாட்டோவில் ஆர்டரைப் பதிவு செய்கிறது. இந்தச் சாதனத்தின் செயல்திறனை நிரூபிக்க, அதன் கண்டுபிடிப்பாளர் சோஹன் எம். ராய் ஒரு நாள் முழுவதும் உணவின்றிச் சோதனை செய்து பார்த்தார். பலர் இதன் நடைமுறைப் பயன்பாடு குறித்துச் சந்தேகம் தெரிவித்தாலும், இந்த விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் ஏற்கெனவே ஒரு தானியங்கி பீட்சா டெலிவரி ட்ரோனை (Autonomous Pizza Delivery Drone) உருவாக்கியதன் மூலம் தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.