ஜனவரி முதல் வாரத்தில் L1 புள்ளியை அடையவிருக்கும் ஆதித்யா L1 விண்கலம்
செய்தி முன்னோட்டம்
சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் திட்டமாக ஆதித்யா L1 திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் நாளன்று செயல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு மாத கால விண்வெளி பயணத்திற்குப் பிறகு, அடுத்த வாரம் தன்னுடைய குறிப்பிட்ட இலக்கை அடையவிருக்கிறது ஆத்தியா L1 விண்கலம்.
இது குறித்த தகவலை மும்பை ஐஐடியில் நடைபெற்ற 'டெக்ஃபெஸ்ட் 2023' நிகழ்வில் பேசிய போது பகிர்ந்து கொண்டிருக்கிறார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத்.
வரும் 2024 ஜனவரி 6ம் தேதியன்று, மாலை 4 மணியளவில் ஆதித்யா L1 விண்கலமானது தன்னுடைய இலக்கை அடையும் என அந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார் அவர்.
சூரியன்
ஆதித்யா L1:
சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 விண்கலத்தை, பூமி மற்றும் சூரியனுக்கு இடையேயான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை (L1) நோக்கிச் செலுத்தியது இஸ்ரோ.
இந்தப் புள்ளியின் ஹேலோ சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்தபடியே சூரியனை எந்தவித தடையும் இல்லாமல் ஆதித்யா L1 விண்கலத்தால் ஆய்வு செய்ய முடியும்.
இந்த ஆதித்யா L1 விண்கலத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆறு உபகரணங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த உபகரணங்கள் அனைத்தும், கடந்த சில மாதங்களில் சோதனை செய்யப்பட்டு சிறப்பாக இயங்குவதாகத் தெரிவித்திருக்கிறார் சோம்நாத்.
இந்த விண்வெளி திட்டத்தின் மூலம் சூரியனின் மேற்பரப்பு மற்றும் அதன் இயக்கும் குறித்து புரிந்து கொள்ளத் திட்டமிட்டிருக்கின்றனர் இந்திய விஞ்ஞானிகள்.