சூரியனை நோக்கிய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இஸ்ரோவின் 'ஆதித்யா-L1' விண்கலம்
சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-L1 விரைவில் தனது திட்டமிட்ட இருப்பிடமான முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத். சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி ஆதித்யா-L1 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில், ஹேலோ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தபடியோ சூரியனை ஆய்வு செய்யும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 125 நாட்கள் பயணம் செய்து ஆதித்யா-L1 விண்கலம் முதலாம் லெக்ராஞ்சு புள்ளியை அடையும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது அதன்படியே, ஜனவரி முதல் வார இறுதியில் ஆதித்யா-L1 அந்த இடத்தை அடையலாம் எனத் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.
முதலாம் லெக்ராஞ்சு புள்ளி (L1):
சூரியன் மற்றும் பூமிக்கிடையே, பூமியிருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள குறிப்பிட்ட பகுதியையே முதலாம் லெக்ராஞ்சு புள்ளி (L1) என அழைக்கின்றனர். சூரியனை ஆய்வு செய்வதற்கு உகந்த மற்றும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் இந்த முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் சூரியன் மற்றும் பூமியின் ஈர்ப்புவிசைகள் சமன்செய்யப்பட்டு விடுவதால், அந்த இடத்தில் சிறிய ஹேலோ சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்தபடியே விண்கலங்களால் நிலை கொண்டிருக்க முடியும். கிட்டத்தட்ட தன்னுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தை ஆதித்யா-L1 அடைந்திருப்பதாகவும், முதலாம் லெக்ராஞ்சு புள்ளியில் ஆதித்யா-L1 நுழைவதற்கான பணிகல் தற்போதே முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்.