ஜிம்முக்குப் போகப் பிடிக்கலையா? கவலையை விடுங்க! வியர்க்காமலேயே ஃபிட்டாக இருக்க உதவுகிறது 'ஜோன் ஜீரோ' பயிற்சி
செய்தி முன்னோட்டம்
உடற்பயிற்சி என்றாலே ஜிம்முக்கு செல்வது, அதிக எடையைத் தூக்குவது அல்லது டிரெட்மில்லில் மணிக்கணக்கில் ஓடுவது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 'ஜோன் ஜீரோ' (Zone Zero) உடற்பயிற்சி என்பது இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இது ஒரு மிகக் குறைந்த தீவிரத்தன்மை கொண்ட செயல்பாடாகும். உங்கள் இதயத் துடிப்பை அதன் அதிகபட்ச அளவிலிருந்து 50 சதவீதத்திற்கும் குறைவாகவே வைத்திருக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் மென்மையான அசைவுகளே ஜோன் ஜீரோ பயிற்சிகள் எனப்படுகின்றன. இதில் மூச்சு வாங்குவதோ அல்லது வியர்ப்பதோ இருக்காது.
ஜோன் ஜீரோ
அன்றாட வாழ்வில் ஜோன் ஜீரோ
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அறியாமலேயே செய்யும் சில விஷயங்கள் ஜோன் ஜீரோ பயிற்சிகளுக்குள் அடங்கும். உதாரணமாக, சாப்பிட்ட பிறகு மெதுவாக நடப்பது (Post-meal stroll), நாற்காலியில் அமர்ந்தபடியே செய்யும் இலகுவான கை, கால் அசைவுகள் (Mobility exercises), வீட்டுக் வேலைகளைச் செய்வது, லிஃப்ட்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். அறிவியல் ரீதியாக இது 'NEAT' (Non-Exercise Activity Thermogenesis) என்று அழைக்கப்படுகிறது. அதாவது முறையான உடற்பயிற்சி அல்லாத செயல்பாடுகள் மூலம் உடல் செலவழிக்கும் ஆற்றலே இதுவாகும்.
நன்மைகள்
இதனால் கிடைக்கும் நன்மைகள்
ஜோன் ஜீரோ உடற்பயிற்சிகள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகின்றன. தொடர்ந்து நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, உடலைச் சிறிய அசைவுகளில் வைத்திருப்பது ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது, மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை (Joint flexibility) அதிகரிக்கிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இது மனத் தெளிவை வழங்குவதோடு, நீண்ட ஆயுளுக்கும் வழிவகுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வயதானவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு இது ஒரு சிறந்த தொடக்கமாகும்.
சுறுசுறுப்பு
இது மட்டுமே போதுமா?
ஜோன் ஜீரோ பயிற்சிகள் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுமே தவிர, இது முழுமையான உடற்பயிற்சிக்கு (Structured workouts) மாற்றாகாது. ஆரோக்கியமான இதயம் மற்றும் தசை வலிமைக்குத் தீவிரமான உடற்பயிற்சிகளும், முறையான உணவு முறையும் அவசியம். இருப்பினும், உடற்பயிற்சியைத் தொடங்கத் தயங்குபவர்களுக்கும், அதிக வேலைப் பளுவில் இருப்பவர்களுக்கும் 'ஜோன் ஜீரோ' ஒரு வரப்பிரசாதமாகும். சிறிய மாற்றங்கள் கூட ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமையும்.