உலக சிக்கில் செல் அனீமியா விழிப்புணர்வு தினம்: இந்த நோயினை பற்றி சில தகவல்கள்
இன்று உலக சிக்கில் செல் அனீமியா விழிப்புணர்வு (World Sickle Anemia Awareness)தினம். இந்நாளில், இந்த சிக்கில் செல் அனீமியாவை (SCD) பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்: சிக்கில் செல் அனீமியா ஒரு வித ரத்தசோகை நோயாகும். சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்கு ரூ.89,155 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். அதற்கு காரணம், இந்தியாவில், இந்த ரத்த சோகை, பழங்குடி மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. 2047க்குள் சிக்கில் (Sickle) செல் அனீமியாவை அகற்றும் பணியை அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். அரசு சார்பில், பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், 0-40 வயதுக்குட்பட்ட, ஏழு கோடி மக்களைப் பரிசோதனைக்கு உள்ளாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிக்கில் செல் அனீமியாவால் உடலில் ஏற்படுத்தும் கோளாறுகள்
இந்த ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட நபரின் சிவப்பணுக்கள், சில விசித்திர ஹீமோகுளோபின்களை கொண்டிருக்கும். அந்த ரத்த அணுக்கள், கடினமாகவும் ஒட்டும் தன்மையுடனும், Sickle (அரிவாள்) வடிவத்திலும் இருக்கும். பொதுவாக, ஆரோக்கியமான சிவப்பணுக்கள் வட்ட வடிவத்திலும், நெகிழ்ச்சி தன்மையுடனும் இருக்கும். இந்த வகை கோளாருடைய சிவப்பணுக்கள், சீக்கிரத்தில் இறந்துவிடும். அதனால், உடலில், ரத்த சோகை ஏற்பட்டு, திசுக்களுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பதில்லை. அடுத்து, இந்த வகை SCD செல்கள், சிறிய இரத்த நாளங்கள் வழியாகச் செல்லும்போது, அவை நாளங்களில் சிக்கி, இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன. இதனால் பக்கவாதம், கண் பிரச்சனைகள், மற்றும் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். பிறப்பிலேயே ஏற்படும் இவ்வகை ரத்த சோகையின் அறிகுறிகள், குறைத்தது ஐந்து மாதம் முதலே தென்படும்.