உலக நதிகள் தினம்: நதிகளை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும்?
இவ்வுலகில் நாகரீகங்களின் உருவாக்கத்திலும், அழிவிலும் நதிகள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. உலகின் தொன்மையான நாகரீகங்கள் பலவும் ஆற்றங்கரையோரங்களிலேயே உருவாகியிருக்கின்றன. டைகிரிஸ் நதியோரத்தில் தோன்றியது சுமேரிய நாகரீகம், நைல் நதியோரத்தில் தோன்றியது எகிப்திய நாகிரீகம், இந்து நதிகரையோரத்தில் தழைத்தோங்கியது இந்து சமவெளி நாகரீம் மற்றும் யாங்ஸி நதியோரத்தில் உருவாகியது சீன நாகரீகம். இப்படி முக்கியமாக நாம் தெரிந்து வைத்திருக்கும் நாகரீகங்கள் பலவும் நதிகரையோரத்தில் துவங்கி நதியினையொட்டியே தழைத்தோங்கியிருக்கின்றன. ஆனால், இன்று உலகின் பல்வேறு மூலைகளில் இருக்கும் நதிகளும் முறையாகப் பராமரிக்கப்படாமல், அழியும் நிலைக்குச் சென்றிருக்கின்றன. மேலும், பல்வேறு நதிகள் மாசடைந்தும் வருகின்றன. இந்நிலையில், நதிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கவும், அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்றைய தினம் உலக நதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
உலக நதிகள் தினம் 2023:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிறு, உலக நதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2005ம் ஆண்டு முதன் முதலில் உலக நதிகள் தினத்தை அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை. உலகில் உள்ள நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்றை அப்போதைய சமயத்தில் மேற்கொண்டிருந்தது ஐக்கிய நாடுகள் சபை. எனவே, அப்போதே இந்த செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிறை உலக நதிகள் தினமாக அறிவித்தது அச்சபை. இன்றைய தினத்தில் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்முடைய வாழ்வில் நதிகள் எவ்வளவு முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், பாரம்பரியம் மற்றும் காலாச்சாரம் எனப் பல்வேறு வகையிலும் நதிகள் எவ்வளவு முக்கியமானவை என்பது குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தலாம். நதிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து அவர்களிடம் நாம் எடுத்துரைக்கலாம்.
ஏன் இந்த நாள் நதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது?
ஏன் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிறு உலக நதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள, நாம் கனடாவிற்கு பயணம் செய்ய வேண்டும். அங்கு தான் நதிகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் மார்க் ஏஞ்சலோ பிறந்திருக்கிறார். நதிகளின் முக்கியத்துவம் குறித்து அதனை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வந்தவர் மார்க் ஏஞ்சலோ. பிராந்திய அளவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிறை 'BC நதிகள் தினமா'கக் கடைப்பிடித்து வந்திருக்கிறார் அவர். அதனை அங்கீகரிக்கும் விதமாகவே, அதே நாளை உலக நதிகள் தினமாக 2005ம் ஆண்டு அறிவித்தது ஐக்கிய நாடுகள் சபை.
மாசடைந்து வரும் நதிகள்:
நதிகளின் முக்கியத்துவம் குறித்து நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், அடுத்த தலைமுறைக்கு அது குறித்த புரிதலை ஏற்படுத்துவது மிக மிக முக்கியம். இப்போதும், உலகில் வாழும் எட்டு பில்லியன் மக்களில் இரண்டு பில்லியன் மக்கள், தங்களது தினசரி பயணம், உணவு மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக நதிகளையே சார்ந்திருக்கிறார்கள். மாறிவரும் காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் நீர் மாசு ஆகியவை நதிகளின் ஆயுட்காலத்தைக் குறைப்பதோடு, அதன் ஆரோக்கியத்தையும் அழித்து வருகின்றன. இந்தியாவில் மட்டும் 351 நதிகள் நிலைகள் கடுமையாக மாசடைந்திருப்பதாக 2018ம் ஆண்டு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.