உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் உலக தாய்ப்பால் வாரத்தைக் கடைப்பிடிக்கின்றனர். தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தாய்ப்பால் கொடுப்பதனால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. ஆரோக்கியமான உடல் நலத்தை பேண பாலூட்டும் தாய்மார்கள் செய்ய வேண்டியவைகளை இப்போது பார்க்கலாம். புரதம், இரும்பு, கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் டி ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை அதிகமாக பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்வது அவசியம். இந்த ஊட்டச்சத்துக்கள் பால் உற்பத்தியை ஆதரிப்பதோடு, தாயின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.
பாலூட்டும் தாய்மார்கள் உண்ண வேண்டியவை
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழு தானியங்கள் போன்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். மேலும், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் 8-12 கிளாஸ் தண்ணீர் குடிப்பது அவசியம். இது நீரிழப்பைத் தடுப்பதோடு, சுரக்கும் பாலின் அளவையும் அதிகப்படுத்துகிறது. பாலூட்டும் தாய்மார்கள் உட்கொள்ளும் அனைத்தும் பால் மூலமாக குழந்தையை சென்றடைவதால், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மது அருந்துவது, காபி குடிப்பது போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களை பாலூட்டும் தாய்மார்கள் தள்ளி வைத்திருப்பது நல்லது. இதனால், குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்படையும் அபாயம் இருக்கிறது. மேலும், அதிக பாதரசம் இருக்கும் டுனா, கானாங்கெளுத்தி போன்ற மீன் வகைகளை தவிர்ப்பதும் நல்லது.