ஆரோக்கிய குறிப்பு: டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன?
கடந்த வாரம், பாலிவுட் குழந்தை நட்சத்திரம் ஒருவர், டெர்மடோமயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சுஹானி பட்நாகர் என பெயர் கொண்ட அந்த நடிகை, அமீர்கானின் 'டங்கல்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அவருக்கு இந்த நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் தோன்றியுள்ளது. அதிலும், பத்து நாட்களுக்கு முன்புதான் அவருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. டெர்மடோமயோசிடிஸ் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்: டெர்மடோமயோசிடிஸ் என்பது அரிதான நோயாகும். இது வீக்கம் மற்றும் தோல் வெடிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த அரிய நோய் மற்ற தசை நோய்களிலிருந்து வேறுபட்டது. இந்த நோய் எந்த வயதிலும் வரலாம் என்றாலும், இது பெரும்பாலும் 50 முதல் 70 வயதுடையவர்களையே பாதிக்கிறது.
அறிகுறிகள் என்ன?
இந்த நோய் எந்த வயதிலும் வரலாம் என்றாலும், பெரும்பாலும் 50 முதல் 70 வயதுடையவர்களையே பாதிக்கிறது என்று தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் அறிக்கை கூறுகிறது. கூடுதலாக, டெர்மடோமயோசிடிஸ் ஆண்களை விட பெண்களில் இரண்டு மடங்கு அதிகமாக தாக்குவதக கூறப்படுகிறது. டெர்மடோமயோசிட்டிஸின் அறிகுறிகள் முக்கியமாக இரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுவத்துவதாக கூறுகிறது. சூரிய ஒளிபடும் இடங்களில் சிவப்பு அல்லது ஊதா நிற தடிப்புகள், வலி அல்லது அரிப்பு, மேல் கண் இமைகளின் வீக்கம், முழங்கைகள், முழங்கால்களில் புள்ளிகள், செதில், கரடுமுரடான தோல், முடி உதிர்தல் போன்றவை இதன் மற்ற அறிகுறிகளாகும். ஒரு நபர் பிறக்கும்போதே இருக்கும் அசாதாரண மரபணுக்கள், புற்றுநோய், தன்னுடல் தாக்க நோய்கள் அல்லது தொற்று போன்றவற்றால் இது ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.