இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி நேர குழப்பங்களைத் தவிர்க்கவும், அபராதங்களைச் செலுத்துவதிலிருந்து தப்பிக்கவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே வருமான வரியைத் தாக்கல் செய்யக் கோரி வலியுறுத்தி வந்தது வருமான வரித்துறை. ஜூன் 30, நண்பகல் 1 மணி நிலவரப்படி 5.83 கோடி பேர் தங்களுடைய வருமான வரியைத் தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வருமான வரித்துறை. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 26.76 லட்சம் பேர் வருமான வரித்தாக்கல் செய்திருக்கிறார்கள். இன்று இரவு 12 மணி வரை அவகாசம் இருக்கும் நிலையில், இன்றும் அதிகளவில் வருமான வரித்தாக்கல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அபராதத்துடன் வருமான வரித் தாக்கல்:
இன்றைக்குள் வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றாலும், அடுத்து டிசம்பர் 31-ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வருமான வரித் தாக்கல் செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கு அபராதமும் வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். ரூ.5 லட்சத்திற்கும் மேல் வருவாசய் கொண்டவர்கள் ரூ.5,000 அபராதத்துடனும், ரூ.5 லட்சத்திற்கும் கீழ் வருவாய் கொண்டவர்கள் ரூ.1,000 அபராதத்துடனும் வருமான வரித் தாக்கல் செய்ய நேரிடும். மேலும், இறுதி நாளான இன்று வருமான வரித் தாக்கல் செய்யாமல் தாமதமாக வரித் தாக்கல் செய்பவர்கள், வருமான வரித் சட்டத்தின் கீழ், நிலுவையில் இருக்கும் வருமான வரிக்கு மாதம் 1% என்ற அளவில் வட்டியும் சேர்த்து வரித் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.