இந்த வீக்கெண்ட், செட்டிநாடு சைவ கோலா உருண்டை செய்து அசத்துங்கள்!
இந்த புரட்டாசி மாதம் முழுவதும் உங்களுக்காகவே சைவ உணவுகளை தமிழ் நியூஸ்பைட்ஸ்-இல் நாங்கள் வழங்கி வருகிறோம். அந்த வகையில் இன்றும் ஒரு சூப்பர் டிஷ் உங்களுக்காகவே! சைவ கோலா உருண்டை. பொதுவாக கோலா உருண்டை என்பது துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியை, நம்மூர் மசாலாப் பொருட்களுடன் கலந்து உருண்டைகளாக தயாரிக்கப்படுவது. ஆனால், இது புரட்டாசி மாதமாகையால், அசைவத்திற்கு மாற்றாக, சோயா சேர்த்து, இறைச்சியில்லா சைவ கோலா உருண்டை செய்வது எப்படி என பார்ப்போம். இறைச்சி சுவையில் இருக்கும் சோயா, புரதம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததும் கூட.
தேவையான பொருட்கள்
2 கப் சோயா துண்டுகள் 1 கப் கொத்தமல்லி இலைகள் 2 முதல் 3 பச்சை மிளகாய் 2 டீஸ்பூன் இஞ்சி உரித்து நறுக்கியது 6 பூண்டு உரிக்கப்பட்டது கறிவேப்பிலை சிறிதளவு ¼ கப் பொட்டுக்கடலை 1 வெங்காயம் நறுக்கியது 2 தேக்கரண்டி சோம்பு 2 தேக்கரண்டி கருப்பு மிளகு 3 டீஸ்பூன் கடலை மாவு ருசிக்க உப்பு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சோயா துண்டுகளை போடவும். அடுப்பை நிறுத்திவிட்டு, 10 நிமிடங்கள் பாத்திரத்தை மூடி போடு மூடி வைக்கவும். பின்னர், அதை வடிகட்டவும். சோயாவில் உள்ள தண்ணீரை பிழிந்து நீக்கவும். ஒரு மிக்ஸியில்,கொத்தமல்லி இலைகள், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பொட்டுக்கடலை பருப்பு, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். அதனுடன் கருப்பு மிளகு சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். இப்போது அதனுடன் வெங்காயம் சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளுங்கள். பின்னர் அதே மிக்ஸி ஜாரில், சோயா துண்டுகளை சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த கலவையை அதே கலவையுடன் சேர்த்து, சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
செய்முறை
இந்த கலவையில் கடலை மாவு சேர்த்து, நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அனைத்தும் நன்றாக ஒன்றிணைந்ததும், அவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடையில் எண்ணெய் சேர்த்து, மிதமான தீயில், அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுக்கவும். உருண்டைகள் பொன்னிறமாகவும் மிருதுவாகவும் வறுக்க வேண்டியது அவசியம். சுவையான செட்டிநாடு சைவ கோலா உருண்டை தயார்!