சமீபத்திய ஆன்லைன் உணவு டெலிவரிகளில் காணப்பட்ட வழக்கத்திற்கு மாறான பொருட்கள்
தொடர்ச்சியான சம்பவங்களில், இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் உணவு மற்றும் ஆன்லைன் ஆர்டர்களில் வினோதமான பொருட்களைக் கண்டறிந்துள்ளனர். குஜராத்தின் ஜாம்நகரில் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டில் ஒரு இறந்த தவளை கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடிப்பதற்கு முன்னர் ஒரு சிலர் அந்த பாக்கெட்டிலிருந்து சில சிப்ஸை உட்கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த மோசமான நிகழ்வை எதிர்கொண்ட ஜாஸ்மின் படேல் என்ற பெண்,"என் மருமகள் பொட்டலத்தை தூக்கி எறிந்தாள்.. அவள் சொன்னதை நான் நம்பவில்லை. ஆனால், உள்ளே இறந்த தவளையைப் பார்த்து நானும் அதிர்ச்சியடைந்தேன்," என்று அவர் கூறினார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவில் காணப்பட்ட உலோக கத்தி மற்றும் மனித விரல்
மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தில், பெங்களூரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் விமானத்தின் போது ஏர் இந்தியா பயணி ஒருவர் தனது உணவில் உலோக கத்தியை கண்டுபிடித்தார். மாதுரேஸ் பால் என்ற பயணி, "ஏர் இந்தியா உணவுகள் கத்தியைப் போல வெட்டக்கூடியவை" என்று சமூக ஊடகங்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், மும்பையில், பிரெண்டன் ஃபெராவ் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் துண்டிக்கப்பட்ட மனித விரலைக் கண்டுபிடித்தார். இரண்டு சம்பவங்களும் உறுதிப்படுத்தப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளன.
ஆன்லைன் டெலிவரிகளில் விஷ பாம்பு மற்றும் இறந்த எலி
வினோதமான சம்பவங்களின் தொடர்ச்சியாக, சமீபத்தில் பெங்களூரு தம்பதியினர் அமேசான் பார்சலில், எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலர் இருக்க வேண்டிய இடத்தில் உயிருள்ள நாகப்பாம்பைக் கண்டுபிடித்தனர். பேக்கேஜிங் டேப் இருந்ததால் பாம்பு அசையாமல் இருந்தது. அதனால் சாத்தியமான தீங்கு தவிர்க்கப்பட்டது. மற்றொரு வழக்கில், ஜெப்டோ மூலம் ஆர்டர் செய்யப்பட்ட ஹெர்ஷேயின் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த எலியைக் கண்டெடுத்தார் பிரமி ஸ்ரீதர். எலியைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அந்த அசுத்தமான சிரப்பை உட்கொண்டனர் எனவும், அதில் ஒருவருக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டது எனவும் கூறப்பட்டது.
பூச்சி ஐஸ்கிரீம் மற்றும் வெற்று சோடா பாட்டில் டெலிவரி
நொய்டாவில், பிளிங்கிட் மூலம் வாங்கப்பட்ட அமுல் ஐஸ்கிரீம் டப்பில் ஒரு பூச்சியை வாடிக்கையாளர் கண்டுபிடித்தார். இந்த சம்பவம் குறித்து நிறுவனம் வருத்தம் தெரிவித்தாலும், வாடிக்கையாளர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறியது. மற்றொரு அசாதாரண சம்பவத்தில், வாடிக்கையாளர் ஒருவர் ஸ்விக்கியில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட லைம் சோடாவிற்குப் பதிலாக சீல் செய்யப்பட்ட வெற்றுக் கண்ணாடி பாட்டிலை பெற்றார். இது பற்றி அவரது சமூக ஊடக இடுகை விரைவாக வைரலானது. கிட்டத்தட்ட 250,000 வ்யூஸ்களைப் பெற்றது.