ஆசிரியர்கள் தினம்: அதன் வரலாறும், சில சுவாரசிய தகவல்களும்
ஆண்டுதோறும், இந்தியாவில், செப்டம்பர் 5ஆம் தேதி, 'ஆசிரியர்கள் தின'மாக கொண்டாடுகிறோம். ஆசிரியர்கள் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள். அவர்கள், ஒவ்வொரு நாளும், மாணவர்களை வாழ்க்கையில் சிறந்தவர்களாக மாற்ற உதவுபவர்கள். உங்கள் திறமையை சரியாக இனம் கண்டு சொல்லவும், அதை மேம்படுத்த தேவையான அறிவுரைகளை வழங்கவும், உங்கள் வாழ்க்கையை சரியான நேர் பாதையில் கொண்டு செல்லவும், ஒரு அகல்விளக்கு போல உங்களை வழிகாட்டவும் இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்களை கொண்டாடும் நாள் தான் இந்த ஆசிரியர் தினம். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய அறிஞரும், தத்துவஞானியுமான டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை போற்றும் வகையில் இந்த நாளை கொண்டாடுகிறோம் என்பது அனைவரும் அறிந்த வரலாறு. எனினும், இதற்கு பின்னால் இருக்கும் வரலாற்று சம்பவம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மற்ற நாடுகள் எப்போது ஆசிரியர்கள் தினத்தை கொண்டாடுகின்றன?
ஒருமுறை, ராதாகிருஷ்ணனின் மாணவர்கள், அவரின் பிறந்தநாளை கொண்டாட அனுமதி கோரியுள்ளனர். அப்போது அதை மறுத்த அவர், தனக்கான எந்த சிறப்பு சலுகையும் கூடாது என்றாராம். மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தவே, ஆசிரியர்களின் பங்களிப்பை பாராட்டுவதற்காக, ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கான கொண்டாட்டமாக வேண்டுமென்றால் இருக்கலாம் என ராதாகிருஷ்ணன் கூறினாராம். அன்று துவங்கப்பட்டது தான், இந்த ஆசிரியர் தின விழா. 1994-ஆம் ஆண்டு, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 'உலக ஆசிரியர் தினம்', அக்டோபர் 5. மற்ற நாடுகள் அந்த நாளில் கொண்டாட, இந்தியாவில் மட்டும் சற்று முன்னதாகவே, செப்டம்பர் 5 கொண்டாடுகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.