அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட சுக்கு - ஓர் பார்வை
'மருந்தே உணவு' என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளவாறு பழங்காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளிலேயே மருத்துவம் நிறைந்திருந்தது. அதில் பலவற்றின் மருத்துவ குணங்கள் நமக்கே தெரியாது. இத்தகைய நிலையில், செரிமானத்தினை சீராக்கும் 'சுக்கு'வின் மருத்துவ குணங்கள் குறித்து தான் நாம் இந்த செய்தி குறிப்பில் பார்க்கவுள்ளோம். காய்ந்துபோன இஞ்சியை தான் சுக்கு என்று கூறுவார்கள். இது கெட்டுபோகாத ஓர் உணவு வகை, அதேபோல் இது உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் எடுத்துக்கொள்ள தகுந்தது. அஜீரண கோளாறுகள் உள்ளோர் சுக்கை துளசி இலையுடன் சேர்த்து நன்றாக மென்று முழுங்கினாலே அஜீரணம் குணமாகிவிடும்.
கடுமையான சளியை நீக்கும் சுக்கு கஷாயம்
பித்த வாந்தியால் அவதிப்படுவோர் தேனுடன் சுக்கை சாப்பிட்டால் குணமடைவர். குழந்தைகள் சரியாக உணவருந்தாமல் மந்தமாக காணப்பட்டால் சுக்கை பொடியாக்கி கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் மந்தநிலை மாறி நன்றாக பசி எடுக்கும் என்று கூறுகிறார்கள். சுக்கு, மிளகு, தனியா, சித்திரத்தை, திப்பிலி உள்ளிட்ட பொருட்களை அரைத்து கஷாயம் செய்து குடித்தால் கடுமையான சளி நீங்கும். சுக்குடன் வேப்பம் பட்டையினை போட்டு அரைத்து கஷாயம் செய்து குடித்து வர, ஆரம்ப நிலையிலுள்ள வாத பிரச்சனை நீங்கும். பெருங்காயத்தூளோடு, சுக்குத்தூளினை சேர்த்து தலையில் தடவினால் தலையில் கோர்த்துள்ள நீரினை உரிஞ்சு எடுத்துவிடும்.
மலச்சிக்கலை சரிசெய்து குடலை சுத்தம் செய்யும் சுக்கு
மலசிக்கல் உள்ளோர் சுக்கோடு, சின்ன வெங்காயத்தினை அரைத்து சாப்பிட்டால் மலசிக்கல் நீங்கி, நச்சுக்கள் வெளியாகும் என்பதோடு குடல் முழுவதும் சுத்தமாகி, வயிற்றுக்குள் இருக்கும் கிருமிகளும் அழிந்து விடுமாம். தொடர்ந்து, உடல் பருமன் குறைக்க விரும்புவோர் சுக்கோடு மிளகு, தனியா விதைகள் உள்ளிட்டவைகளை நன்றாக வறுத்து, தூளாக அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் எடை குறையும். இல்லையேல் சுடுநீரில் சுக்கு தூளை கலந்து குடித்து வந்தாலும் வயிறிலுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
சோர்வுகளை நீக்கும் சுக்கு, மிளகு, திப்புலி
உடல் அசதி, சோர்வுகளை போக்க சுக்கை மிளகு, கருப்பட்டியோடு சேர்த்து அரைத்து நீரில் கலந்து குடிக்கலாம். சுக்கோடு சிறிது தனியாவை வைத்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் மது அருந்திய போதை தெளிவடையும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வெற்றிலையை சுக்கோடு சேர்த்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் வாயுத்தொல்லை நீங்கும். பசும்பாலில் சுக்கு தூள், நாட்டு சர்க்கரையை சேர்த்து உண்டால் சிறுநீரக நோய் தொற்று குணமடையும். சுக்கு மற்றும் உப்பு சேர்த்து பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் கூச்சமும் சரியாகும்.
விஷ ஜுரம் மற்றும் விஷ கடிகளை சரிசெய்யும் சுக்கு
பல மருத்துவ குணங்களை கொண்ட சுக்குக்கு விஷ காய்ச்சல் நீக்கும் தன்மையும் உண்டு என்று கூறுகிறார்கள். சுக்கு, மிளகு, வேப்பிலை, பூண்டு உள்ளிட்டவற்றை சேர்த்து தண்ணீரை கொதிக்க விட்டு 2 நாட்களுக்கு 3 வேளைகள் வீதம் பருகி வந்தால் விஷ ஜுரம் குணமடைந்து விடுமாம். 5 மிளகு, சிறிது சுக்கு, ஒரு வெற்றிலையை உண்டு தண்ணீர் குடித்தால் விஷ கடி முறியும். எதுவுமே அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அதுபோல் சுக்கையம் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். அளவாக சாப்பிட்டு ஆரோக்கியம் நிறைந்த வாழ்வினை நலமாக வாழுங்கள்..!