பொங்கல் ஸ்பெஷல்: தைத் திருநாளின் வரலாறு பற்றி காண்போம்
செய்தி முன்னோட்டம்
நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும்.
பொங்கல், என்பது அறுவடைக் காலத்தின் கொண்டாட்டமாகும். ஆடி மாதத்தில், விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள், தை மாதத்தில், நல்ல விளைச்சலை தர வேண்டியும், முந்தைய மாதங்களில் நல்ல விளைச்சல் வந்ததற்காகவும், எடுக்கப்படும் விழா.
மக்கள், தங்களுக்கு நலனிற்கு உதவிய பூமித்தாய்க்கும், இயற்கை அன்னைக்கும், மற்றும் விளைச்சலுக்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறி, வணங்குவர்.
பண்டிகையின் துவக்கத்தில், மக்கள், வீட்டை சுத்தம் செய்து, வீட்டின் முகப்பில் கூரைப்பூ சொருகி வைத்து, மாவிலை தோரணம் கட்டுவர். இதன் மூலம், தங்கள் வீட்டில், பொங்கல் திருவிழா துவங்கி விட்டதென்று அறிவிப்பதாக ஐதீகம்.
பொங்கல்
தைத் திருநாள் கொண்டாட்டம்
பொங்கல் விழாவின் இரண்டாம் நாள், தை திருநாள் ஆகும்.
தை முதல் நாள் கொண்டாடப்படும் இந்த விழாவில், விவசாயத்திற்கு துணை நின்ற, பூமி தாய்க்கும், சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாக சில நடைமுறைகளை பின்பற்றுவர்.
முதற்கண், காலையில் விடிவதற்கு முன், வாசலில் வண்ண கோலமிட்டு, அதில், புது அடுப்பேற்றி, புது பொங்கல் பானையில், அறுவடை செய்த பச்சரிசி இட்டு, பால், வெல்லம், நெய் சேர்த்து கொதிக்க விட்டு, பால் பொங்கி வரும் வேளையில், 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி சூரியபகவானுக்கு படைப்பர்.
இதோடு, தெய்வத்திற்கு படைக்கப்படும் பொங்கல் படையலில், மஞ்சள் கிழங்கும், கரும்பும், வாழை, மற்றும் விளைந்த காய்கறி வகைகள் சேர்க்கப்படும்.
ஜாதிமத பேதமின்றி, பொங்கல் விழா தமிழ்நாட்டில் அனைவராலும் கொண்டாடபடுகிறது.