பொங்கல் ஸ்பெஷல்: மாட்டு பொங்கல் பற்றி சில தகவல்கள்
நான்கு நாள் பண்டிகையாக, தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் விழா, போகி பண்டிகையில் ஆரம்பித்து, காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும். பொங்கல், என்பது அறுவடைக் காலத்தின் கொண்டாட்டமாகும். ஆடி மாதத்தில், விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள், தை மாதத்தில், நல்ல விளைச்சலை தர வேண்டியும், முந்தைய மாதங்களில் நல்ல விளைச்சல் வந்ததற்காகவும், எடுக்கப்படும் விழா. மக்கள், தங்களுக்கு நலனிற்கு உதவிய பூமி தாய்க்கும், இயற்கை தாய்க்கும், மற்றும் விளைச்சலுக்கு உதவிய பண்ணை விலங்குகளுக்கும் நன்றி கூறி, வணங்குவர். இவ்விழாவின் துவக்க நாளில், மக்கள், வீட்டை சுத்தம் செய்து, வீட்டின் முகப்பில் மாவிலைத் தோரணம் கட்டி அலங்கரிப்பார்கள். இதன் மூலம், தங்கள் வீட்டில், பொங்கல் திருவிழா துவங்கி விட்டதென்று அறிவிப்பதாக ஐதீகம்.
மாட்டுப் பொங்கல்
பொங்கல் விழாவின் மூன்றாம் நாள் மாட்டு பொங்கல் ஆகும். தை மாதம் இரண்டாம் நாள், அதாவது, தைத் திருநாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது மாட்டுப் பொங்கல் ஆகும். விவசாயத்திற்கு உதவிய சூரியக் கடவுளுக்குஅடுத்தபடியாக, உழவுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள். மாட்டு பொங்கல் அன்று, வீட்டில் உள்ள மாடுகளை குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, அவர்களை தெய்வத்திற்கு நிகராக போற்றி வணங்குவர். இந்நாளின் ஒரு தொடர்ச்சியாக தான், ஏறு தழுவுதல் என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு, தமிழகம் எங்கும் நடைபெறும். தாங்கள் பராமரிக்கும் மாடுகளின் பலத்தை பறைசாற்றவும், தங்களின் வீரத்தை வெளிப்படுத்தவும், விளையாடப்படும் இந்த வீர விளையாட்டு, மாநிலம் முழுவதும் விமரிசையாக நடைபெறும். தமிழக அரசின் சார்பாகவே இவ்விழா பல இடங்களில் நடைபெறுகிறது.