நல்ல கடன்கள் மற்றும் கெட்ட கடன்கள், கடன் குறித்து ராபர்ட் கியோசாகி கூறுவது என்ன?
இந்தியாவில் கடன் வாங்குதல் என்பது எப்போதும் ஒரு பொறுப்பற்ற செயலாகவே பார்க்கப்படுகிறது. ஒருவரது நிதித் தேவைகளுக்கு ஏற்ப அவர் சம்பாதிக்காமல் போவதே கடன் வாங்குவதற்கான காரணமாக இருக்கிறது என்பதே அனைவரது கருத்துமாக இருக்கிறது. ஆனால், உலகில் அதிகளவில் விற்பனையாகும் சுயநிதி நூலான 'Rich Dad, Poor Dad' நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, கடன் வாங்குவதை வேறு விதமாக அனுகுகிறார். ஒருவரது நிதித் தேவைகள் மற்றும் செலவினங்களையயே சொத்துகள் மற்றும் செலவினங்கள் என இரண்டாகப் பிரித்து தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார் அவர். சாம்பாதிக்கும் அனைவரும், கடன் வாங்கும் அனைவரும் அதனை செலவு செய்வதையே முதன்மையாகச் செய்வதாகவும், அது நிதிப் பற்றாக்குறையையே ஏற்படுத்தும் எனவும் அவர் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.
ராபர்ட் கியோசாகி சொல்வது என்ன?
இந்நிலையில், அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கும் ஒரு காணொளியில், தனக்கு 1.2 பில்லியன் டாலர்கள் கடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். ஆனால், இந்த கடன்களை தன்னுடைய செலவினங்களுக்குப் பயன்படுத்தாமல், சொத்துக்களைச் சேர்க்கப் பயன்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். ஆம், செலவினங்களுக்கு எப்போதும் தான் கடன் வாங்குவதில்லை எனவும் (EMI போன்றவை), சொத்துக்களை வாங்கவே தான் கடன் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளார் அவர். ஃபெராரி, ரோல் ராய்ஸ் என பல்வேறு உயர்ரக கார்களை தான் வைத்திருந்தாலும், அதற்கான தொகையை முழுமையாகச் செலுத்தியே தான் வாங்குவதாகத் தெரிவித்திருக்கும் அவர், செலவினங்களுக்கான கடன் வாங்குவது, கூடுதல் செலவினமாகவே கருதப்பட வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.
பணத்தின் மீதான நம்பிக்கை:
பணத்தின் (அமெரிக்க டாலர்) மீது தனக்கு நம்பிக்கை இல்லை என இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்தக் காணொளியில் கூறுகிறார் ராபர்ட் கியோசாகி. அதாவது, தான் எப்போது பணத்தை பணமாக வைத்திருப்பதில்லை எனக் கூறும் அவர், தான் வைத்திருக்கும் பணத்தையெல்லாம் உடனடியாக தங்கமாகவே, வெள்ளியாகவோ மாற்றி விடுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தங்கம் மற்றும் வெள்ளி எனக் குறிப்பிட்ட முதலீடுகள் மீது அதீத நம்பிக்கை வைப்பதும் ஆபத்து தான் எனக் கூறும் அவர், பணத்தை பிட்காயின்களாகவும் மாற்றி வைத்திருப்பதாக அந்தக் காணொளியில் தெரிவித்துள்ளார். பணத்தை வெறும் குப்பை எனக் குறிப்பிடும் அவர், காகித பணத்தை விட தங்கம் நிலையானது எனத் தெரிவித்துள்ளார்.
இருவகைக் கடன்கள்:
கடன்களையே நல்ல கடன் மற்றும் கெட்ட கடன் என இரண்டாகப் பிரிக்கிறார் ராபர்ட் கியோசாகி. சொத்துக்களைச் சேர்ப்பதற்காக, புதிய சொத்துக்களை வாங்குவதற்காக வாங்கப்படும் கடன்களை நல்ல கடன்கள் என வகைப்படுத்துகிறார் அவர். அதேபோல், காலப்போக்கில் மதிப்புக் கூடாத பொருட்களை வாங்குவதற்காக மற்றும் அன்றாட செலவினங்களுக்காக வாங்கப்படும் கடன்களைக் கெட்ட கடன் என வகைப்படுத்துகிறார். ஒரு தங்க நகை வாங்குதவற்காக, ஒரு நிலம் வாங்குவதற்காக அல்லது முதலீடு செய்வதற்காக வாங்கப்படும் கடன்களை நல்ல கடன்கள் எனவும், நாம் பயன்படுத்தும் பொருட்களுக்காக, ஊர்சுற்றுவதற்காக அல்லது இதர மதிப்பில்லாத செயல்களில் ஈடுபடுவதற்காக வாங்கப்படும் கடன்களைக் கெட்ட கடன்கள் எனவும் குறிப்பிடுகிறார் ராபர்ட் கியோசாகி.