
பாரம்பரிய உணவு என்று அழைக்கப்படும் இட்லியின் பூர்வீகம் இந்தியா அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்
செய்தி முன்னோட்டம்
தினமும் காலை, சூடான இட்லியுடன், சாம்பாரும், சட்னியும் என ருசித்து சாப்பிடும் நபரா நீங்கள்?
உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல். இட்லி நமது தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு என்று இத்தனை நாள் நீங்கள் நம்பிக்கொண்டிருந்தது பொய். இட்லியின் பூர்வீகம் இந்தியாவே இல்லை எனக்கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பிரபல உணவு வரலாற்றாசிரியர் கே.டி. ஆச்சார்யாவின் கூற்றுப்படி, இட்லி, 7-12 நூற்றாண்டுக்குள் தான் இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கும் எனக்கூறுகிறார்.
மேலும் இந்த உணவு, இந்தோனேசியாவிலிருந்து வந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதென்றும் அவர் கூறுகிறார்.
இந்தோனேசியாவில் அது 'கெட்லி' அல்லது 'கேதாரி' என்று அழைக்கப்பட்டது.
7- 12ஆம் நூற்றாண்டு வரை, பல இந்து மன்னர்கள் இந்தோனேசியாவை ஆட்சி செய்தனர்.
இட்லி
இந்தோனேசியா மன்னர்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்த இட்லி
அவர்கள் இந்தியாவுக்கு வரும்போது, அவர்களுடன் வந்த அரச சமையல்காரர்கள் மூலம் இந்தியாவிற்குள் இட்லி அறிமுகம் ஆகி இருக்கும்.
இப்படித்தான் இந்தோனேசிய 'கெட்லி', இந்தியாவுக்கு வந்து 'இட்லி'யாக மாற்றப்பட்டது என அவர் மேலும் கூறுகிறார்.
மற்றொரு ஆய்வில், இந்தியாவில் குடியேறிய அரபியர்கள் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
காரணம், அரேபியர்கள் ஹலால் உணவுகள் மற்றும் அரிசி உருண்டைகளை மட்டுமே உட்கொள்வதாக கூறப்படுகிறது. .இந்த அரிசி உருண்டைகள் சற்று தட்டையான வடிவத்தில் இருந்தன என்றும்,அதனுடன் தேங்காய் குழம்பு (சட்னி) சேர்த்து உண்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கி.பி 10ஆம் நூற்றாண்டில் கஜினி முகமது படையெடுப்புக்கு பின்னர், சௌராஷ்ட்ரிய வணிகர்கள், தென்னிந்தியாவிற்கு இடம் பெயர்ந்து, இட்லியின் செய்முறையைக் கொண்டு வந்து, அதற்குப் பெயரிட்டதாகவும் கூறப்படுகிறது.