டாக்டர் சீட்டு இல்லாம இந்த மாத்திரை வாங்குறீங்களா? சிறுநீரக செயலிழப்பு அபாயம்; மருந்து கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கடைகளில் நேரடியாக சென்று வலி நிவாரணி மாத்திரைகள் (NSAIDs) மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை வாங்கி உட்கொள்வது மக்களிடையே பெருமளவில் அதிகரித்து வருகிறது. இத்தகைய கண்டபடி மாத்திரைகள் சாப்பிடும் தவறான பழக்கம் மனிதர்களின் சிறுநீரகத்தை மெதுவாகப் பாதித்து, நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்க்கு வழிவகுக்கும் என்று இந்திய மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) அனைத்து மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
பாதிப்பு
வலி நிவாரணி மாத்திரைகள் எவ்வாறு சிறுநீரக இரத்த ஓட்டத்தைப் பாதிக்கின்றன?
ஸ்டீராய்டு அல்லாத வீக்க எதிர்ப்பு மருந்துகளான (NSAIDs) வலி நிவாரணிகள், உடலில் காய்ச்சல் மற்றும் வலியைக் குறைத்தாலும், சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை பராமரிக்கும் புரோஸ்டாக்ளாண்டின் (Prostaglandin) உற்பத்தியைத் தடுக்கின்றன.
இதனால் சிறுநீரகத்தின் கழிவுகளை சுத்திகரிக்கும் திறன் (GFR) படிப்படியாகக் குறைகிறது.
ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள் மற்றும் உடம்பில் நீரிழப்பு (Dehydration) உள்ளவர்கள் இத்தகைய வலி நிவாரணிகளைத் தொடர்ந்து எடுக்கும்போது, அவர்களின் சிறுநீரகம் மிக விரைவாக செயலிழக்கும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மருந்து எதிர்ப்புத் திறன்
ஆன்டிபயாடிக் தவறான பயன்பாடும் மருந்து எதிர்ப்புத் திறன் ஆபத்தும்
சாதாரணச் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு பலர் சுய மருத்துவம் மூலம் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.
பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய ஆன்டிபயாடிக் மருந்துகளை தேவையின்றி உட்கொள்வது, உடலுக்குள் மருந்து எதிர்ப்புத் திறனை உருவாக்கிவிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.
மேலும், தேவையில்லாமல் சாப்பிடும் சில வீரியமிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் நேரடியாக சிறுநீரக நச்சுத்தன்மையை உண்டாக்கி உடலின் இயல்பு நிலையைப் பெருமளவில் பாதிக்கும் என புனே மருத்துவக் கல்லூரி மருத்துவர் அமிதாவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடு
அட்டவணை H மற்றும் H1 விதிகளின் கீழ் மாத்திரைகள் விற்பனைக்குக் கட்டுப்பாடு
வலி நிவாரணி மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பொதுமக்கள் முற்றிலும் பயன்படுத்தக் கூடாது என்று CDSCO கூறவில்லை.
மாறாக சரியான அளவில், மருத்துவரின் வழிகாட்டுதலோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
இந்தியாவில் பெரும்பாலான வலி நிவாரணிகள் அட்டவணை H பிரிவிலும், ஆன்டிபயாடிக் மருந்துகள் அட்டவணை H1 பிரிவிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, தகுதியான மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்தவொரு மருந்தகமும் இந்த மாத்திரைகளை பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யக் கூடாது என CDSCO கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.