மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!
உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், கொசுக்கள் மூலமாக பரவும் மலேரியாவின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றன. உயிர்கொல்லியாக பார்க்கப்படும் இந்த நோயை கட்டுப்படுத்த பல நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்போது லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் மலேரியாவை ஒழிக்க, கொசுக்களின் மரபணு மாற்றலாம் என்றும், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுள்ளனர். மலேரியா என்பது, பிளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இது அனாபிலிஸ் கொசுக்களால் மக்களுக்கு தொற்றுகிறது. இந்த கொசுக்களின் மரபணுக்களை மாற்றியமைதால், மலேரியா பரவல் கட்டுப்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதன்படி, பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் திறனைத் தடுத்து, இந்த ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியை தடுப்பது அல்லது அதன் வளர்ச்சி நேரத்தை கட்டுப்படுத்தலாம் என முடிவெடுத்தனர்.
மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள்
ஒட்டுண்ணிகள், கொசுவின் குடலுக்குள் வளர்ந்து, அதன் உமிழ்நீர் சுரப்பிகளுக்குச் சென்று, கொசு கடிக்கும் அடுத்த நபரை மூலம் பரவும். இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள், கொசுவின் குடலில், ஒட்டுண்ணியின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம், மலேரியா பரவல் கட்டுப்படுத்தப்படும் என நம்பினர். இந்த மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட கொசுக்கள், மனித இரத்தத்தை உண்ணும் போது, அவை அவற்றின் குடலில், ஆண்டிமைக்ரோபியல் பெப்டைடுகள் எனப்படும் இரண்டு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இந்த மூலக்கூறுகள் மலேரியா ஒட்டுண்ணியின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. இதன் விளைவாக, ஒட்டுண்ணியின் அடுத்த கட்ட வளர்ச்சியான, கொசுவின் உமிழ்நீர் சுரப்பிகளை அடைய தாமதமாகிறது. இந்த காலகட்டத்திற்குள், கொசுக்களின் ஆயுட்காலமும் இயற்கையாகவே முடிந்துவிடும். இப்படியாக மலேரியா பரவல் தடுக்கப்படும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.