LOADING...
நெஞ்செரிச்சலுக்கு மாத்திரை போடுபவரா நீங்கள்? சிறுநீரக பாதிப்பு முதல் ஞாபக மறதி வரை; நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கும் பேராபத்து
அசிடிட்டி மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கும் பேராபத்து

நெஞ்செரிச்சலுக்கு மாத்திரை போடுபவரா நீங்கள்? சிறுநீரக பாதிப்பு முதல் ஞாபக மறதி வரை; நரம்பியல் நிபுணர்கள் எச்சரிக்கும் பேராபத்து

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
12:38 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வீடுகளில் செரிமானக் கோளாறு ஏற்பட்டால் உடனே அசிடிட்டி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது ஒரு சாதாரண பழக்கமாகிவிட்டது. ஆனால், மருத்துவரின் பரிந்துரை இன்றித் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை உட்கொள்வது மௌனமான சுகாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார் எச்சரித்துள்ளார். வயிற்றில் அமில உற்பத்தியைக் குறைக்கும் மாத்திரைகள் PPI என அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக அல்சர் அல்லது தீவிர நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு 4 முதல் 8 வாரங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால், கோடிக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாக இவற்றைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

முக்கிய பாதிப்புகள்

நீண்ட காலப் பயன்பாட்டால் ஏற்படும் 4 முக்கிய பாதிப்புகள்

டாக்டர் சுதிர் குமார் சுட்டிக்காட்டியுள்ள அபாயங்கள் இதோ:- இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு நேரடியாக வழிவகுக்கும். உணவு செரிமானத்திற்கு வயிற்று அமிலம் அவசியம். அது குறைக்கப்படும்போது, எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், நரம்பு மண்டலத்திற்குத் தேவையான வைட்டமின் B12 மற்றும் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் எலும்பு முறிவு மற்றும் ரத்த சோகை ஏற்படலாம். வைட்டமின் B12 குறைபாடு ஏற்படுவதால், மூளையின் செயல்பாடு குறைந்து ஞாபக மறதி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்றில் உள்ள அமிலம் உணவோடு வரும் கிருமிகளைக் கொல்லும் முதல் பாதுகாப்பு அரணாகும். அமிலம் குறையும்போது நிமோனியா மற்றும் குடல் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.

தடுப்பு முறைகள்

மாத்திரை இன்றி அசிடிட்டியைத் தடுக்கும் வழிகள்

மாத்திரைகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க டாக்டர் சுதிர் குமார் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைப் பரிந்துரைக்கிறார். சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் வரை படுக்கக் கூடாது. காஃபின், அதிக காரமான உணவுகள் போன்றவற்றைக் கண்டறிந்து தவிர்க்க வேண்டும். உடல் எடையைக் குறைப்பதன் மூலம் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கலாம். 8 வாரங்களுக்கு மேலாக நீங்கள் அசிடிட்டி மாத்திரை எடுத்துக்கொள்பவர் என்றால், உடனடியாக மருத்துவரை அணுகி அதை எப்படிக் குறைப்பது என்று ஆலோசிக்க வேண்டும். உங்கள் உடல் அமிலம் சுரப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முறையான மருத்துவக் காரணம் இன்றி அதைத் தன்னிச்சையாக அடக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement