மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்; விலங்குகள் நலத்துறையின் காதலர் தின வேண்டுகோளுக்கு, நெட்டிசன்கள் பதில்
இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியை, மனிதர்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, பசுமாடுகள் மீது காதலை பொழியுங்கள் என்று கோரிக்கை விடுத்திருந்தது விலங்குகள் நல வாரியம். அதனால், அன்று மக்கள் பசு மாடுகளை கட்டி அணைத்து, தங்கள் அன்பைப் பகிர வேண்டும் என்றும் அந்த வாரியம் கேட்டு கொண்டுள்ளது. மேலும், அப்படி செய்தால் "உணர்ச்சிச் செழுமை" ஏற்படும் என்றும் "தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மகிழ்ச்சி" கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு ட்விட்டர் வாசிகள் இணையத்தில், பல வித்தியாசமான பதில்களை அளித்து வருகின்றனர்.
பசுவை அரவணைக்கும் நாள்!
பிப்ரவரி 14ஆம் தேதி பசுவை மாட்டை அரவணைப்பீர்!
பசு, இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது என்றும், பல்லுயிரியலை இது குறிக்கிறது என்றும், AWBIயின் செயலாளர் எஸ்.கே. தத்தா கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது. "அன்னையைப் போல் ஊட்டமளிக்கும் குணத்தை கொண்டுள்ளதால், பசு மாடுகள் காமதேனு என்றும் கௌமாதா என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தினால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது." என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து நெட்டிஸின்கள் பலவித கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.