பிப்ரவரி 14, மாட்டை கட்டிப்பிடிக்கும் தினம்: இந்திய விலங்குகள் நல வாரியம்
இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு மாட்டை கட்டிப்பிடிக்கும் தினமாக பெயரிட்டுள்ளது. அதனால், பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மக்கள் பசு மாடுகளை கட்டி அணைத்து தங்கள் அன்பைப் பகிர வேண்டும் என்று அந்த வாரியம் கேட்டு கொண்டுள்ளது. மேலும், அப்படி செய்தால் "உணர்ச்சிச் செழுமை" ஏற்படும் என்றும் "தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கு மகிழ்ச்சி" கிடைக்கும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதற்கு பதிலளித்த பால் பண்ணையாளர்கள், சமீபத்தில் தோல் கட்டி நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டபோது இந்த வாரியம் எங்கே சென்றிந்தது என்ற கேள்வியை எழுப்பி உள்ளனர். பொதுவாக, பிப்ரவரி 14 காதலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆனால் அதை கொண்டாடுவது இந்திய கலாச்சாரத்திற்கு முரணானது என்று சில பிரிவினரால் விமர்சிக்கப்படுகிறது.
நம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது: AWBI
பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கிறது என்றும் பல்லுயிரியலை இது குறிக்கிறது என்றும் AWBIயின் செயலாளர் எஸ்.கே. தத்தா கையெழுத்திட்ட அறிக்கை கூறுகிறது. "அன்னையைப் போல் ஊட்டமளிக்கும் குணத்தை கொண்டுள்ளதால், பசு மாடுகள் காமதேனு என்றும் கௌமாதா என்றும் அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் மேற்கத்திய கலாச்சாரத்தினால் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய நாகரீகத்தால் நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டது." என்று கூறியுள்ள அந்த அறிக்கையில், இது தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை மற்றும் மீன்பிடிதுறை ஆகிய அமைச்சகங்களின் வழிகாட்டுதலின் பேரில் வெளியிடப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.