அஞ்சல் அலுவலகத்தில் கொலு வைத்து வித்தியாசமாக நவராத்திரி கொண்டாட்டம்
ஒவ்வொரு வருடமும் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, இந்த வருடம் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு மக்கள் வீட்டில் கொலு வைத்து, விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவது வழக்கம். ஆனால் திருச்சியில் தலைமை அஞ்சல் நிலையத்தில், போஸ்டல் கொலு வைக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 அஞ்சல் கோட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களால் இந்த போஸ்டல் குழு வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க, முக்கிய சேவைகளை கொலு பொம்மைகளாக வைக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையின் திட்டங்களை எடுத்துரைக்கும் கொலு பொம்மைகள்
ஒவ்வொரு கொலுவும் அஞ்சல் துறையின் ஒவ்வொரு திட்டங்களை எடுத்துரைப்பதாக அமைக்கப்பட்டுள்ளதாக, மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் நிர்மலா தேவி தெரிவித்தார். இந்த கொலுவை பார்க்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், இந்த முயற்சியின் நோக்கம் அஞ்சல் துறை மக்களுக்கு அளிக்கும் சேவைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது எனக் கூறினார். மேலும் அஞ்சல் துறையின் சேவைகளை மக்கள் தெரிந்து கொள்வதற்காக ஜனரஞ்சகமாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், 24 ஆம் தேதி வரை இந்த கொலு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் எனவும் அவர் தகவல் அளித்தார்.