புரட்டாசி ஸ்பெஷல்: சுவைமிக்க காளான் பிரியாணி செய்முறை
ஞாயிற்றுகிழமை என்றாலே அநேக வீடுகளில் மதிய உணவு, பிரியாணி தான்! ரிலாக்ஸ்ட்டான சண்டேவில், ஈஸியாக செய்யக்கூடிய காளான் பிரியாணி செய்வது எப்படி என இன்று பார்க்கப்போகிறோம். புரத சத்து நிறைந்த காளான், சிக்கனுக்கு சிறந்த மாற்றாகும். குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கட்டாயம் சாப்பிட வேண்டிய பொருளாக காளான் மாறியுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிட முடியாதவர்களும் இந்த காளான் பிரியாணியை செய்து பாருங்கள். அசைவ பிரியாணி போலவே இருக்கும். சரியான அளவில் மசாலாவை சேர்த்து செய்யும் போது, யாருக்குமே இது சைவ பிரியாணி என்றே கண்டுபிடிக்க முடியாது. பிரியாணி செய்ய பாசுமதி அரிசியை விட சீராக சம்பா அரிசியை பயன்படுத்தினால், சுவை அள்ளும்!
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் நெய் 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் 1 இலவங்கப்பட்டை 3 ஏலக்காய் 1 கருப்பு கல்பாசி 2 கிராம்பு 1 பிரிஞ்சி இலை 1 பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது 2 கீறிய பச்சை மிளகாய் 1 பெரிய தக்காளி பொடியாக வெட்டயது 200 கிராம் காளான்கள் 2 தேக்கரண்டி மிளகாய் தூள் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் சீரக தூள் 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள் 3 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள் 3 டீஸ்பூன் புதினா இலைகள் 1 கப் சீரக சம்பா அரிசி தேவைக்கேற்ப உப்பு 1¼ கப் தண்ணீர்/ தேங்காய் பால்
செய்முறை
சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 -30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் நெய்யை சூடாக்கவும். தரப்பட்டுள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து, அவற்றை குறைந்த தணலில் வதக்கவும். லேசாக வதங்கியதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இப்போது நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், தக்காளி மற்றும் காளான்களை சேர்க்கவும். நன்றாக கலந்து, மேலும் 10 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதனுடன், மசாலாப் பொடிகளைச் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வதக்கவும்.
செய்முறை
பின்னர் இந்த மசாலா கலவையுடன், சிறிது கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவவும். நன்றாக கலக்கவும். கழுவி ஊற வைத்த சீரக சம்பா அரிசியை போட்டு, அரைத்த மசாலாவுடன் நன்றாக சேரும் வகையில் வதக்கவும். கவனிக்க: இவை அனைத்துமே குறைத்த அல்லது மிதமான தீயில் செய்ய வேண்டும். பின்னர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். பின்னர் குக்கரை மூடி வைத்து, குறைந்த தணலில் 1 விசில் விடவும். அல்லது 10 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்னர், அடுப்பை அனைத்து, ஸ்டீம் தானாக போகும் மட்டும் காத்திருக்கவும். பின்னர், குக்கரை திறந்து, லேசாக கிளறி, ரைதாவுடன் சூடாக பரிமாறவும்.