ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5 பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள்
கோவிட்டின் மாறுபட்ட வடிவமாகக் கூறப்படும் ஓமைக்ரானின் புதிய வகையான XBB.1.5, தற்போது வரை, 38 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்த வகை வைரஸ், 82% அமெரிக்காவிலும், 8% இங்கிலாந்திலும் மற்றும் 2% டென்மார்க்கிலும் பதிவாகி உள்ளது. இந்த வைரஸ்-ஐ ' கிராகன்' என்றும் அழைக்கின்றனர். இது முதன்முதலில், சென்ற ஆண்டு அக்டோபரில், அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்த வகை வைரஸ், எளிதில் பரவக்கூடிய சக்தி வாய்ந்தது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில், WHO இன் மூத்த தொற்றுநோயியல் நிபுணர், மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "XBB.1.5 வைரஸ் கிருமியானது, இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ் மறுபாடுகளிலேயே, அதிவேகமாக பரவக்கூடிய குணம் கொண்டது" என்றார்.
வைரஸ் பரவல் மற்றும் அதன் அறிகுறிகள்
அமெரிக்காவின் ஆய்வில், இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், சுமார் 1.6 பேருக்குத் தொற்றை பரப்புவார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வைரஸ் மாறுபாடு, F486p எனப்படும் பிறழ்வு புரதத்தில், ஒரு ஸ்பைக்கை ஏற்படுத்தி, வைரஸ் உடலின் செல்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது. அடுத்து, இந்த துணை மாறுபாட்டிற்குள் உள்ள பிறழ்வுகள், இந்த வைரஸை உயிரணுக்களுடன் ஒட்டிக்கொண்டு எளிதில் நகலெடுக்க அனுமதிக்கின்றன. தற்போதைய நிலையில், XBB.1.5 வைரஸ், கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக எவ்வித சான்றும் கண்டறியப்படவில்லை. WHO இன் கூற்றுப்படி, இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள், முந்தைய மாறுபாடுகளை போலவே இருக்கும் எனவும், கூடவே, குளிர் காலத்தில், அதிக மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் கூறுகின்றது.