இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி
கொரோனா பாதிப்பு அலைகள் சமீப காலமாக குறைந்து, மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனாவின் புது ரூபமான பிஎப்7 என்னும் வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியானது. இது மக்கள் மத்தியில் மீண்டும் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இந்த பிஎப்7 புதிய வகை கொரோனா வைரஸ் 3 பேருக்கு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிஎப்7 என்பது ஒமிக்ரான் மாறுபாடான பிஏ5ன் துணை வகையாம், இது வெகு சீக்கிரமாக தடுப்பூசி போட்டவர்களுக்கும் பரவ கூடிய வலுவான திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
பிஎப்7 பரவல் குறித்து டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை
இந்த வலுவான தொற்றுத் திறனை கொண்ட பிஎப்7 வைரஸ் உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா துணைசார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "நமது நாட்டில் இன்னும் கொரோனா முடிவுக்கு வரவில்லை. கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து அறிவுறுத்தல்களும் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.