புரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
வரும் செப்டம்பர் 18 அன்று, தமிழ் மாதத்தில் புனிதமான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டபடி, புரட்டாசி மாதம், இந்துக்களுக்கு புனிதமான மாதம் என்றும், இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் கருதுகிறார்கள். அதனால், இந்த மாதத்தில், இறைவனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து, அவருக்கு படையலிட்டு வணங்குவர். அதேபோல, அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் இருப்பதும் வழக்கம். ஆனால், எதற்காக இந்த விரதம் என தற்போதுள்ள தலைமுறையினர் பலருக்கும் தெரியாது. இதில் ஆன்மிகம் தாண்டி, அறிவியல் காரணங்களும் உண்டு என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். சரி, குறிப்பாக புரட்டாசியில் எதற்காக அசைவத்தை தவிர்க்க வேண்டும்? தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
ஏன் அசைவ உணவு சாப்பிடக் கூடாது?
பொதுவாக புரட்டாசி மாதத்தின் போதுதான், பருவ மழை தொடங்கும். அதுநாள் வரை வெயிலும், காற்றும் வெட்டியெடுத்து, திடீரென மழைகாலம் தொடங்கும். இதனால், இதுவரை தகித்து வந்த பூமி, மழை பொழியும் போது, ஈரப்பதத்தை தன்னுள் உறிஞ்சி, சூட்டை வெளியில் அனுப்பும். அதனால், மனிதனுக்கு சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தை விட உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக்கூடும். அதனால், அப்போது அசைவம் சாப்பிடுவதால், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, நம் உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும். அதனால், உடலில், பல ஆரோக்கிய சீர்கேடுகள் ஏற்படும். சருமம் உலர்ந்து போகுதல், அதிகமாக வியர்த்தல், உடல் வெப்பநிலை உயர்ந்து, இதயத்துடிப்பும் அதிகரிக்க கூடும். இதோடு குறிப்பாக அஜீரண கோளாறுகள் ஏற்படும்.