அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
கோவில்களில் வழிபாட்டிற்கு பூ, பழம், ஏதேனும் வேண்டுதல் காணிக்கை வைத்து தான் பார்த்திருப்பீர்கள். சரக்கு பாட்டிலை அர்ச்சனை தட்டில் வைக்கும் கோவில் பற்றி கேள்வி பட்டிருக்கீர்களா? அதிர்ச்சி அடைய வேண்டாம்! மற்றுமொரு ஆச்சரிய தகவல். நீங்கள் அர்ச்சனை தட்டில் தரும் சரக்கு பாட்டிலில், கடவுளுக்கு படைத்தது போக மிச்சத்தை, உங்களுக்கே பிரசாதமாகவும் திருப்பி தருகிறார்கள். அதுமட்டுமில்லாமல், கோவில் வாசலில் இருக்கும் கடைகள் அனைத்திலும் சரக்கு பாட்டில் விற்கப்படுகிறது. அதில் உள்ளூர் சரக்கு முதல், வெளிநாட்டு மதுபானம் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப வாங்கி, அர்ச்சனை செய்யலாம். இப்படி ஒரு அதிசய கோவில் எங்குள்ளது என ஆச்சரியமாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்.
உஜ்ஜைன் நகரில் உள்ள கால பைரவநாத் கோவில்
மத்திய பிரதேசத்தின், உஜ்ஜைன் நகரில் உள்ள கால பைரவநாத் கோவில் தான் அந்த வினோத கோவில். பத்ரசேனன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படும் பழமையான கோவில் இது. இங்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் மதுவை, கால பைரவர் சிலையின் வாய் அருகே, ஒரு தட்டை வைத்து ஊற்றுகிறார்கள் பூசாரிகள். ஊற்றப்படும் மது, அப்படியே சிலையின் வாய் வழியே உள்ளே போய்விடும் விநோதமும் நடக்கிறது. இது குறித்து பல ஆராய்ச்சிகள் நடத்திய பின்னரும், அந்த மது எப்படி உள்ளே போகிறது, எங்கு போகிறது என கண்டுபிடிக்கவே முடியவில்லை எனக்கூறுகிறார்கள் அங்கிருப்பவர்கள். இந்த ஆச்சரியங்கள் அடங்கிய கோவிலுக்கு வருகை தருபவர்கள் வேண்டுவது அனைத்தும் நடப்பதாக நம்பப்படுகிறது.