Loading...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: சென்னை, காட்பாடி, விழுப்புரத்தில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 16 சிறப்பு ரயில்கள் இயக்கம்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை முதல் 16 சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: சென்னை, காட்பாடி, விழுப்புரத்தில் இருந்து நாளை முதல் 3 நாட்களுக்கு 16 சிறப்பு ரயில்கள் இயக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 22, 2026
07:00 pm

செய்தி முன்னோட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை, காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து நாளை முதல் மூன்று நாட்களுக்குப் பதினாறு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் நாளை மறுநாள் அதிகாலை பரணி தீபமும் மாலை ஆறு மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபத்தைத் தரிசிக்கத் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சுமார் ஐம்பது லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த சிறப்பு மெமு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ரயில்கள் விவரம்

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் விவரம்

ரயில் எண் 06143 சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி வழியாகக் காலை 11 மணிக்குத் திருவண்ணாமலை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06144 திருவண்ணாமலையில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும்.

இதேபோல் ரயில் எண் 06093 தாம்பரத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணிக்குத் திருவண்ணாமலைக்கும், ரயில் எண் 06094 இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரத்திற்கும் செல்லும்.

இணைப்பு ரயில்கள்

காட்பாடி மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் இணைப்பு ரயில்கள்

காட்பாடியில் இருந்து மதியம் 3.30 மணி மற்றும் இரவு 8.55 மணிக்கும், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 12.35 மணி மற்றும் மாலை 6 மணிக்கும் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

விழுப்புரத்தில் இருந்து காலை 10.10 மணி, மாலை 4.20 மணி மற்றும் இரவு 8 மணிக்கும், திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணி, மதியம் 3 மணி மற்றும் மாலை 6.20 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

சிறப்பு ரயில்கள்

விழுப்புரம் - வேலூர் கண்டோன்மென்ட் இடையே திருவண்ணாமலை வழியாக இரவு நேர சிறப்பு ரயில்கள்

ரயில் எண் 06062 விழுப்புரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்குப் புறப்பட்டுத் திருவண்ணாமலை வழியாக அதிகாலை 1.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06061 வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து அதிகாலை 2.05 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

நவம்பர் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களும் தினமும் இந்த பதினாறு சிறப்பு ரயில்கள் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

ADVERTISEMENT