செயலிழந்த பான் கார்டை வைத்து வருமான வரித்தாக்கல் செய்யலாமா?
செய்தி முன்னோட்டம்
பான் கார்டு மற்றும் ஆதாரை இணைக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாகவே கால அவகாசம் கொடுத்து வந்தது மத்திய அரசு. அதன் பின்பு பான் மற்றும் ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண்ணானது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயலிழந்து விடும் எனவும் அறிவித்திருந்தது மத்திய அரசு.
கடந்த 2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31-ஆக இருக்கும் நிலையில், செயலிழந்த பான் எண்ணை வைத்து வருமான வரித் தாக்கல் செய்ய முடியுமா, முடியாத என்ற குழப்பம் பலரிடமும் நிலவி வந்தது.
இந்நிலையில், இந்தக் குழப்பத்திற்கான விடையாக தங்களது வலைத்தளப் பக்கத்திலேயே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது வருமான வரித்துறை.
வருமான வரித் தாக்கல்
செயலிழந்த பான் கார்டைக் கொண்டு வருமான வரித் தாக்கல்:
தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில், "ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்படவில்லை என்றாலும், பான் கார்டு செயலிழந்திருந்தாலும் கூட, அந்த பான் கார்டை வைத்து வருமான வரித் தாக்கல் செய்ய முடியும்.
எனவே, கடைசி நிமிடம் வரைக் காத்திருக்காமல், உடனடியாக வருமான வரித் தாக்கல் செய்யவும்" எனக் குறிப்பிட்டிருக்கிறது வருமான வரித்துறை.
வடஇந்தியாவில் சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைச் சுட்டிக்காட்டி சிலர் வருமான வரித்தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டு வருகின்றனர். ஆனால், இந்த முறை எக்காரணம் கொண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படமாட்டாது என வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வருமான வரித்தாக்கல் செய்யவில்லை என்றால், ரூ.5,000 வரை அபராதம் செலுத்த நேரிடும்.