LOADING...
மாரடைப்பு ஆண்களுக்கு மட்டும் அல்ல! இந்தியப் பெண்களை அதிகம் தாக்கும் இஸ்கிமிக் இதய நோய்; அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்
இந்தியப் பெண்களின் உயிரிழப்பிற்கு காரணமாகும் இஸ்கிமிக் இதய நோய்

மாரடைப்பு ஆண்களுக்கு மட்டும் அல்ல! இந்தியப் பெண்களை அதிகம் தாக்கும் இஸ்கிமிக் இதய நோய்; அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
04:53 pm

செய்தி முன்னோட்டம்

இதய நோய்கள் பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், உலக சுகாதார நிறுவனத்தின் 2021 தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக பெண்களின் உயிரிழப்பிற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது இஸ்கிமிக் இதய நோய் ஆகும். ஒரு லட்சம் மக்கள் தொகையில் சுமார் 99.4 பெண்கள் இந்த நோயால் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. இதயத்திற்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகள் கொழுப்புப் படிமங்களால் தடிமனாகி, ரத்த ஓட்டம் தடைபடுவதே இந்த நோயாகும்.

பின்னணி

ஏன் பெண்களிடம் இது கண்டுகொள்ளப்படுவதில்லை?

பெண்களுக்கு ஏற்படும் இதய நோய் அறிகுறிகள் ஆண்களிடமிருந்து மாறுபடுகின்றன. மார்பு வலி போன்ற வழக்கமான அறிகுறிகளுக்குப் பதிலாக, பெண்களுக்கு அதிகப்படியான சோர்வு, மூச்சுத் திணறல், குமட்டல் அல்லது கழுத்து, தாடை மற்றும் முதுகுப் பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் பெரும்பாலும் மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் அல்லது செரிமானக் கோளாறுகள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அலட்சியப்படுத்தப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

காரணிகள்

பெண்களுக்கான 5 முக்கிய பாதிப்பு காரணிகள்

பெண்களுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளை மருத்துவ நிபுணர்கள் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பெண்களின் ரத்த நாளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது. மாதவிடாய் நின்ற பிறகு, ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் ரத்த நாளங்கள் தடிமனாகி, கெட்ட கொழுப்புகள் படிந்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகரிப்பது தமனிச் சுவர்களில் அழுத்தத்தை ஏற்படுத்தி அவற்றைச் சேதப்படுத்துகிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இதன் பாதிப்பு இரட்டிப்பாக இருக்கும். உடலில் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி மார்டைப்பிற்கு வழிவகுக்கின்றன. இது ரத்த நாளங்களின் உட்புறத்தை வலுவிழக்கச் செய்து, வீக்கத்தை உண்டாக்கி ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது.

Advertisement

சிகிச்சை

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

இஸ்கிமிக் இதய நோயின் தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறுபடும். ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவு, முறையான உடற்பயிற்சி மற்றும் புகையிலைப் பழக்கத்தைக் கைவிடுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில், ரத்த ஓட்டத்தைச் சீர் செய்ய ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரம்பக்காலக் கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது பெண்களின் வாழ்நாளை நீட்டிக்க உதவும்.

Advertisement