சர்வதேச Zero Waste Day : கழிவுகளை பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
Zero Waste Day, உலகம் முழுவதும் அனுசரிக்கபடுகிறது. இந்நாளில், கழிவுகளை பற்றியும், அதை முறையாக அகற்றுவது, மறுசுழற்சி செய்வது பற்றியும், கழிவு மேலாண்மை பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கருத்தரங்கங்கள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். அதோடு, மக்களும் பங்கு கொள்ளும் சில வேடிக்கையான மற்றும் சிந்தனையை தூண்டும் நிகழிச்சிகளும் நடைபெறும். இந்த நாளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சில தகவல்கள் இதோ: குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஏதுமில்லையென்றால், 2050க்குள், உலகளாவிய கழிவு உற்பத்தி, 3.4 பில்லியன் டன்களை எட்டும், என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது சமீபத்திய உலக வங்கி புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 70% அதிகமாகும். மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயகரமான கழிவுகளும் இதில் அடங்கும்.
அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளும், மின்னணு கழிவுகளும்
வாழ்க்கையின் தரத்தை பொறுத்து, கழிவுகளின் உற்பத்தி அதிகரிக்கும். உலக வங்கியின் கூற்றுப்படி, சராசரியாக ஒரு நபர், ஒரு நாளைக்கு 0.74 கிலோ கழிவுகளை உற்பத்தி செய்கிறார். புவி, வெப்பமயமாதலுக்கு, மாசு மட்டுமே காரணமில்லை. மனிதனின் முறையற்ற கழிவு மேலாண்மையும் காரணம் என ஐ.நா சபையின் அறிக்கை கூறுகிறது. மக்காத குப்பை வரிசையில், பிளாஸ்டிக்கிற்கும் முக்கிய பங்கு உள்ளது. ஒரு பிளாஸ்டிக் பாட்டில் மக்குவதற்கு, 450 ஆண்டுகள் ஆகும். ஒரு ஆய்வறிக்கையின் படி, 1950களில் இருந்து 2017 வரை, 8.3 பில்லியன் டன் பிளாஸ்டிக், மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 9% மட்டுமே மறுசுழற்சிக்கு ஏதுவானது. 2030க்குள், பூமியில் 74 மில்லியன் டன், மின்னணு கழிவுகள் உருவாகும் என அறிக்கைகள் தெரிவிக்கிறது