இன்று உலக இட்லி தினம்: தமிழர்களின் பாரம்பரிய உணவை பற்றி சில தகவல்கள்
தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாக கருதப்படுவது இட்லி. ஒருபுறம் மிருதுவான இட்லியுடன், சட்னியும்,சாம்பாரும்...! மறுபுறம், இட்லியும், கறி குழம்பும்...! இப்படி எந்த வகையான சைடு டிஷ் உடனும் பொருந்தி போகும் ஒரே உணவு இட்லி தான். நோயாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு இட்லி தான் என மருத்துவர்களே கூறுவார்கள். அதற்கு காரணம், அது எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது, அதோடு, உடலுக்கு தேவையான புரதமும், கார்போஹைட்ரெட்ஸ்-ம் நிரம்பி உள்ளது. இட்லியில் பல வகைகள் உண்டு: அரிசி-உளுந்து இட்லி காஞ்சிபுரம் இட்லி குஷ்பூ இட்லி பொடி இட்லி தட்டு இட்லி ரவா இட்லி இதுபோக, தற்போதைய காலத்திற்கு ஏற்ப, அவல் இட்லி, இட்லி மஞ்சூரியன், ஓட்ஸ் இட்லி, பிரைட் இட்லி என பல மாறுதல்களை அடைந்துள்ளது இட்லி.
விண்வெளி வீரர்களுக்கும் இட்லி
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும், முதல் விண்வெளி வீரர்கள் குழுவிற்கு, தயாரிக்கப்பட்டிருக்கும் உணவு பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் ஐட்டம் இட்லி. DRDO அமைப்பு, அந்த இட்லியை, 2 ருபாய் நாணய வடிவில் தயார் செய்து, அதில் உள்ள ஈரப்பதத்தை உறுஞ்சி எடுக்கும் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. அதனுடன், சட்னி பொடியும், சாம்பார் பொடியும், விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்படும் எனவும் கூறப்படுகிறது. இட்லி, தென்னிந்தியர்களுக்கு மட்டுமல்ல, வடஇந்தியர்களுக்கும் தற்போது விருப்ப உணவாகி விட்டது. மாவை அரைத்து வைத்து விட்டால், இதை விட ஈஸியான உணவே இல்லை எனலாம். முதன்முதலில், 2015-ல், இனியவன் என்பவர்தான், 1,328 வகை இட்லிகளை தயார் செய்து, 'இட்லி டே' கொண்டாட வேண்டும் என துவங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.