
அசைவத்திற்கு மாற்றான சைவ ஃப்ரைடு சிக்கன் செய்வது எப்படி?
செய்தி முன்னோட்டம்
புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது, இந்த மாதத்தில் அசைவ உணவு சாப்பிட முடியவில்லையே என வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகவே அசைவ உணவைப் போலவே, அதே சுவையைக் கொடுக்கக்கூடிய, அதே சமயம் சைவ உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய பல்வேறு உணவு வகைகள் இருக்கின்றன.
அவற்றில் ஒரு வகையான சைவ ஃப்ரைடு சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சிப்பிக் காளான் - 125 கிராம்
கார்ன் பிளவர் மாவு - ஒன்றரை கப்
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
சமையல் குறிப்பு
சைவ ஃப்ரைடு சிக்கன்: செய்முறை
சிப்பிக் காளானை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பின்னர் தனியே ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்திருக்கக்கூடிய கார்ன் பிளவர் மாவு, மிளகு தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் இந்த மாவுக் கலவையில் சிறிதளவை தனியே எடுத்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.
தனியே ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும். பின்னர், ஒரு சிப்பிக் காளானை எடுத்து, மேற்கூறிய தண்ணீர் சேர்த்த மாவு கலவையில் நன்கு முக்கி எடுத்து, தண்ணீர் சேர்க்காத மாவுக்கலவையில் ஒரு பிரட்டு பிரட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சைவ ஃப்ரைடு சிக்கன் ரெடி.