அகவிலைப்படியை உயர்த்திய மத்திய அரசு.. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடுவது எப்படி?
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை நேற்று (அக்டோபர் 18) 4% வரை உயர்த்தி அறிவித்தது மத்திய அரசு.
இதனைத் தொடர்ந்து, முன்னதாக 42% ஆக இருந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணமாது, தற்போது 46% ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த மாற்றம் செய்யப்பட்ட அகவிலைப்படியானது 2023, ஜூலை 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.
இந்த அகவிலைப்படி உயர்வால் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், அகவிலை நிவாரண உயர்வால் 67.95 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயனடையவிருக்கிறார்கள்.
மத்திய அரசு
அகவிலைப்படி உயர்வைக் கணக்கிடுவது எப்படி?
இந்த அகவிலைப்படி 4% வரை உயர்த்தப்பட்டிருந்தாலும், அது ஒருவர் பெறும் மொத்த சம்பளத்திற்கும் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு அரசு ஊழியர் பெறும் அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர் பெறும் அடிப்படை ஓய்வூதியத்தின் அடிப்படையிலேயே இந்த உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் பெறும் அடிப்படை சம்பளத்தை 46-ஐ பெருக்கி, அதை 100-ல் வகுத்தால் கிடைக்கும் அளவே, அவர் கூடுதலாகப் பெறவிருக்கும் அகவிலைப்படி ஆகும்.
உதாரணத்திற்கு ஒரு ஊழியர், ரூ.30,000 அடிப்படை சம்பளமாக பெறுகிறார் எனில், அதனை 46-ஆல் பெருக்கி (13,80,000), 100-ஆல் வகுத்தால் (13,800) கிடைக்கும் விடையே அவர் உயர்த்தப்பட அகவிலைப்படியாகும். இதனை அடிப்படை சம்பளத்துடன் கூட்டினால், அவர் பெறும் மொத்த சம்பளத்தின் அளவு கிடைக்கும்.