இந்த வாழ்க்கை முறை குறிப்புகள் மூலம் உங்கள் 2024ஐ ஆரோக்கியமாக்குங்கள்
நம்மில் பலர் நம் வாழ்க்கையை மேம்படுத்தும் நம்பிக்கையில் புதிய ஆண்டைத் தொடங்குகிறோம். மேலும் இங்குள்ள பெரும்பாலானோருக்கு, உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பான நோக்கங்கள் தான் புத்தாண்டு தீர்மானங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். அத்தகைய புத்தாண்டுத் தீர்மானங்கள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைய வேண்டுமென்றால், இப்போதிருந்தே நீங்கள் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உங்கள் அன்றாட வாழ்க்கை முறைக்கு, நீங்கள் செயல்படுத்த வேண்டிய சில வாழ்க்கையை மாற்றும் பரிந்துரைகள் இதோ உங்களுக்காக இங்கே தரப்பட்டுள்ளன.
தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
இது பொதுவாக வழங்கப்படும் அறிவுரையாக இருந்தாலும், பெரும்பாலான மக்கள், ஒரு நாளாவது, நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தை பெற மாட்டோமா என ஏங்குவதுண்டு. இந்த ஆண்டு, கதையை மாற்றவும்! பெரியவர்களாக இருந்தால், தினசரி இரவு, குறைந்தது ஏழு மணிநேரம் தூங்க வேண்டும். இதை தினசரி கட்டாயமாக்குங்கள். அதே நேரத்தில், தினமும் ஒரே நேரத்தில் தூங்கி எழுந்திரிக்க பழகிக்கொள்ளுங்கள்.
திரை நேரத்தை குறைக்கவும்
அதிகப்படியான திரை நேரம் மற்றும் மோசமான உளவியல் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பை பல ஆய்வுகள் வெளிகாட்டுகின்றன. அதனால், இந்த ஆண்டு உங்கள் சமூக ஊடக பயன்பாட்டை நீங்கள் குறைக்க வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். திரையைப் பயன்படுத்தாமல் இருப்பது என, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அதை எப்படி செய்வது என்று யோசிக்கிறீர்களா? நன்றாக உறங்குவதற்கு, நீங்கள் படுக்கை செல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன், உங்கள் தொலைபேசியை தூர வைத்துவிடுங்கள்.
இயற்கையோடு நேரத்தை செலவிடுங்கள்
இயற்கையோடு நேரத்தை செலவிடுவது, மன அழுத்தத்தை குறைக்க உதவும். இது நம்மில் பெரும்பாலோர் தினமும் செய்யும் தவறான, அதிகப்படியான திரை நேரம் மற்றும் மன அழுத்தத்திற்கு மாற்றாக, ஒரு வித சமநிலையை மனதிற்கு வழங்குகிறது. ஆராய்ச்சியின் படி, தினமும் சில நிமிடங்களை இயற்கையோடு செலவிடுவதால், உங்கள் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம், உங்கள் கவனத்தை அதிகரிக்கலாம் மற்றும் உங்களுக்கு உள்ள மனநலப் பிரச்சினைகளை குறைக்க உதவும்.