காய்ச்சல் மட்டுமில்லை, கண்ணிலும் பிரச்னை வரலாம்: H1N1 ஸ்வைன் ஃபுளூவின் 7 ஆபத்தான கண் அறிகுறிகள்
செய்தி முன்னோட்டம்
காய்ச்சல், உடல் வலி, தொண்டை வலி மற்றும் இருமல் போன்றவை H1N1 இன்ஃப்ளூயன்சா (ஸ்வைன் ஃபுளூ) காய்ச்சலின் பொதுவான அறிகுறிகளாகும். H1N1 வைரஸ் முதன்மையாக சுவாச மண்டலத்தை பாதித்தாலும், இந்த தொற்றினால் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சி அரிதாக கண்களையும் பாதிக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காய்ச்சலின் போது சிலருக்கு கண்கள் சிவத்தல், நீர் வடிதல், எரிச்சல் அல்லது அசௌகரியமான உணர்வு ஏற்படலாம். இவை பொதுவாக காய்ச்சல் குணமடையும் போது சரியாகிவிடும். இருப்பினும், அரிதான சூழல்களில் இந்த வைரஸ் பாதிப்பு விழித்திரை அல்லது பார்வை நரம்பை பாதித்து, பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
அறிகுறிகள்
அலட்சியப்படுத்தக் கூடாத 7 ஆபத்தான அறிகுறிகள்
காய்ச்சலின் போது அல்லது காய்ச்சல் முடிந்தவுடன் பார்வை திடீரென மங்குவது அல்லது தெளிவற்றுப் போவது.
தொடர்ந்து இருக்கும் கண் வலி அல்லது அசௌகரியம்.
வெளிச்சத்தை பார்க்கும்போது கண்கள் கூசுவது அல்லது கூச்சம் ஏற்படுவது.
கஞ்சங்டிவிடிஸ் (மெட்ராஸ் ஐ) போல கண்கள் தொடர்ந்து சிவப்பாக மாறுவது.
கண்கள் வறண்டு அல்லது தொடர்ந்து நீர் வடிந்துகொண்டே இருப்பது.
விழித்திரையில் பிரச்சனை ஏற்படும் போது பார்வையில் திடீரென ஒளிரும் கோடுகள் அல்லது மின்னல்கள் தோன்றுவது.
பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போன்ற புள்ளிகள் திடீரென அதிகமாக தெரிவது.
இவற்றில் ஏதேனும் அறிகுறி தோன்றினால் உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
தடுப்பு முறைகள்
கண்களை பாதுகாக்கும் தடுப்பு முறைகள்
மருத்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் அல்லது ஸ்டீராய்டு சொட்டு மருந்துகளைக் கண்களில் ஊற்றக் கூடாது. அது பாதிப்பை அதிகரிக்கலாம்.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். காய்ச்சல் இருக்கும் போது அடிக்கடி கண்களைத் தொடுவதையோ அல்லது தேய்ப்பதையோ தவிர்க்க வேண்டும்.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள அதிக அளவில் தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
திடீர் பார்வைக் குறைபாடு, அதிக கண் வலி அல்லது மின்னல் போன்ற புள்ளிகள் தெரிந்தால், அதனைச் சாதாரண காய்ச்சல் அறிகுறி என நினைக்காமல் உடனடியாகக் கண் மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும்.