இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்
உலகின் பல்வேறு நாடுகளின் சிறப்பு நிகழ்வுகளையும், சிறப்பு நாட்களையும் ஒட்டி டூடுல்களை (Doodles) வெளியிடுவது கூகுளின் வழக்கம். அதேபோல், ஆகஸ்ட் 15ம் நாளான இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது கூகுள். இன்றைய டூடுலில், இந்தியாவின் நெசவுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெசவு செய்த ஆடைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது போலான டூடுலை வெளியிட்டிருக்கிறது கூகுள். இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கும் இன்றைய டூடுலை, புதுடெல்லியைச் சேர்ந்த நம்ரதா குமார் என்பவர் வடிவமைத்திருப்பதாக, அதன் டூடுல் வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது கூகுள்.
கூகுள் டூடுலில் இடம்பெற்றிருக்கும் நெசவு மாதிரிகள்:
இந்த கூகள் டூடுலில், உத்திரபிரதேச பனாராசி சேலை முதல் தமிழகத்தின் காஞ்சிபுரம் சேவை வரை 21 வகையான நெசவு மாதிரிகளின் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், பஞ்சாபின் புல்கரி எம்பிராய்டரி, ராஜஸ்தானின் லெகரியா டை, மகாராஷ்டிராவின் பைதானி நெசவு மற்றும் மேற்கு வங்காளத்தின் கந்தா எம்பிராய்டரி ஆகிய நெசவு மாதிரிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டூடுலை வடிவமைத்த நம்ரதா குமார் இது குறித்து பேசும் போது, "இந்தியாவில் பல மாநிலங்களில் பலவிதமான நெசவு முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு நெசவு முறையும் தனித்துவமானது. இந்தியாவின் இந்த நெசவுப் பாரம்பரியத்தை எடுத்துரைக்கவே இந்த டூடுலை வடிவமைத்தேன். இது இந்தியாவின் பல மாநிலங்களின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.