பானி பூரி தினத்தை டெக்னாலஜி உடன் கொண்டாடிய கூகிள் டூடுல்
ஒரு காலத்தில் வட மாநிலங்களில், குறிப்பாக தலைநகர் டெல்லியில் மட்டுமே பிரபலமாக இருந்தது பானி பூரி. மஹாபாரத காலத்தில், பாண்டவர் ஐவருக்கும், சொற்பமாக இருந்த கோதுமை மாவையும், உருளை கிழங்கையும் சேர்த்து, அவர்கள் பசியை போக்கவே, இந்த பானி புரியை கண்டுபிடித்ததாகவும் வரலாறு உண்டு. அன்றைய மகத நாடு, இன்றைய பீகார் மாநிலத்தில் தான் முதன்முதலில் இந்த ருசியான சாட் உணவு தோன்றியதாக மற்றுமொரு வரலாறும் கூறுகிறார்கள். இருப்பினும், தொழில்முறை காரணமாக பல ஊர்களுக்கு புலம்பெயரும் வடமாநிலத்தவர் மூலமாக தற்போது தமிழகத்தில் அனைத்து தெருக்களிலும் கிடைக்கும் உணவாகி விட்டது இந்த பானி பூரி. இந்த உணவிற்கு அண்டை மாநிலங்களில் வேறுவேறு பெயர்கள் உண்டு- கோல் கப்பா, ஃபுச்கா,குப்சப் இன்னும் பல.
கோல்டன் புக் அப் ரெகார்டஸ்-இல் இடம் பிடித்த பானி பூரி
சரி, எதற்காக இந்த நாளை பானி பூரி தினமாக கொண்டாடுகிறார்கள்? கடந்த ஜூலை 12, 2015 அன்று, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள 'இந்தோரி ஜெய்கா' என்ற உணவகம், மாஸ்டர்செஃப் நேஹா ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், 51 சுவைகளில், பலவித பானி பூரிகளை வழங்கியதற்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது - உலகளவில், அதிக எண்ணிக்கையிலான சுவைகள் கொண்ட உணவாக தேர்வு செய்யப்பட்டது. அந்த நாளை நினைவுகூறவே, இந்த நாளை தேர்வு செய்துள்ளது கூகிள். அதன்படி, இன்றைய கூகிள் டூடுலில், பானி பூரி கேம் ஒன்றை வைத்துள்ளது. இந்த கேமில், ஒரு பானிபூரி விற்பனையாளர், ஆர்டர்களை நிறைவேற்ற உதவ வேண்டும். வேடிக்கையான இந்த கேம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.