நண்பர்கள் தினம் : நட்பின் இலக்கணமாக வரலாற்றில் இடம்பெற்ற நட்புகள்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருமே பணம், காசு, உறவுகள் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நட்பு இல்லாமல் வாழ்வது அசாத்தியமானது. இத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பிற்கு திருவள்ளுவர் ஓர் தனி அதிகாரத்தினையே ஒதுக்கி நட்பின் சிறப்புகளை, 'நட்பதிகாரம்' என தனி அதிகாரம் ஒதுக்கி, தனது குறள் மூலம் எடுத்துரைத்துள்ளார். சாதி, மதம் அனைத்தையும் கடந்தது தான் நல்ல நட்பு. இந்த நட்பினை கொண்டாட ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் 'நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. நட்பின் சிறப்பினை புராண கதைகள் மற்றும் இதிகாசங்களிலும் நமது முன்னோர்கள் போற்றி அதனை அடுத்த தலைமுறை தெரிந்துக்கொள்ளும் வகையில் புத்தகங்களில் எழுதி பாதுகாத்துள்ளார்கள்.
கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்
அதில் ஒன்று தான் கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் இருவரும் கொண்டிருந்த நட்பு. இவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்காமல், பேசாமல் இருந்தாலும் தங்களது நட்பினை உயர்த்தி காண்பித்து நமக்கு உதாரணமாக விளங்குகிறார்கள். ஒருவருக்கொருவர் எவ்வித பொறாமையும் இன்றி நட்பு பாராட்டினார்கள் என்று வரலாற்று கதைகள் எடுத்துரைக்கிறது. கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து இறந்ததை அறிந்த பிசிராந்தையாரும் வடக்கிருந்து தனது உயிரினை துறந்தார். நட்பு பாலினம் சார்ந்தது இல்லை என்பதை எடுத்துரைக்கவும், தமிழ் கூறும் நல்லுலகில் வரலாற்று கதைகள் உண்டு. அவ்வைக்கு, அதியமான் மன்னன் நெல்லிக்கனியை கொடுத்த சம்பவம், அதியமானுக்கு தமிழ்பால் கொண்டிருந்த பிரியம் மட்டும் காரணமல்ல. அவ்வையிடம் அவன் கொண்டிருந்த நட்பும் ஒரு காரணம். நட்பிற்கு வயதோ பாலினமோ, ஒரு தடையல்ல என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
கர்ணன்-துரியோதனன்
இவர்களை தொடர்ந்து, அடுத்த இதிகாச நட்பு என்றால், அது மகாபாரதத்தில் போற்றப்படும் கர்ணன்-துரியோதனன் நட்புதான். தனது சகோதரர்கள் என்று தெரிந்தும், நட்பின் காரணமாக கர்ணன் பாண்டவர்களுக்கு எதிராக, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தான். தனது உண்மையான நண்பனுக்காக கர்ணன் தனது அன்பை மட்டும் கொடுக்காமல், தனது இன்னுயிரையும் கொடுக்க துணிந்தான். ஒரு முறை துரியோதனன் மனைவியுடன் கர்ணன் பகடக்காய் விளையாடி கொண்டிருக்கையில், துரியோதனன் வருவதையறிந்த அவன் மனைவி எழுந்திருக்க, அது தெரியாமல் கர்ணன் துரியோதனின் மனைவியை, "பாதி விளையாட்டில் எங்கு செல்கிறாய்?"என்று கூறி பிடித்திழுத்தத்தில், அவரது முத்துமாலை அறுந்து கீழே விழ, அப்போது துரியோதனனின் வருகையினை கண்ட கர்ணன், தன்னை தன் நண்பன் தவறாக எண்ணி விடுவானோ என பயத்தில் பதபதைத்தான்.
கண்ணன்-அர்ஜுனன்
ஆனால் துரியோதனன் தனது நண்பன் மற்றும் மனைவியை சந்தேகிக்காமல், அறுந்த முத்துக்களை சேர்க்கவா? கோர்க்கவா? என்று கேட்டுள்ளார். இதுபோல் நண்பர்களுக்குள் அதீத நம்பிக்கை வேண்டும் என்பதற்கு இவர்கள் சான்றாக தற்போதுவரை பார்க்கப்படுகிறார்கள். மற்றுமொரு உயர்ந்த நட்பு சார்ந்த கதை ஒன்று மகாபாரதத்திலேயே உள்ளது. அதுதான் கண்ணன்-அர்ஜுனனின் நட்பு. இந்த இதிகாசத்தில் கண்ணன் கடவுளாக பார்க்கப்பட்டாலும், அவன் அர்ஜுனன் மற்றும் அவனது குடும்பத்திற்கு மிகப்பெரிய துணையாக உடன் இருந்தவன். நண்பன் என்னும் காரணத்தினால் அவன் ஆசைப்பட்டதெல்லாம் கண்ணன் செய்யவில்லை. அர்ஜுனனுக்கு என்ன தேவையோ, எது நல்லதோ அதை மட்டுமே செய்தான். தனது நண்பனுக்கு சாரதியாக மாறிய கண்ணன், தர்ம வழியினை போரின் பொழுது போதித்தான்.
கிருஷ்ணன்- சுதாமா
அர்ஜுனன் அகந்தையை அழித்து, சோர்வுற்ற நேரங்களில் அவனுக்கு புத்துணர்வினை வழங்கினான், கண்ணன். அதேபோல் அர்ஜுனனும், கண்ணனுக்கு சிறந்த நண்பனாக இருந்து, அக்ரோணி சேனையினைவிட, தனது நண்பனின் துணைபோதும் என்று கூறினான். இதன்படி நண்பன் என்பவன் நல்வழி காட்டுபவனாக இருக்க வேண்டுமே தவிர, தனது சொந்த பிரச்சனைகளுக்காக சுயநலம் கொண்டு தன் நண்பனை பயன்படுத்த கூடாது என்று இந்த இதிகாசங்கள் நமக்கு உணர்த்துகின்றன. மற்றுமொரு இதிகாச நட்பு, கிருஷ்ணன்- சுதாமாவின் நட்பு. நட்பு என்பது பணம், பதவியை தாண்டியது என்பதற்கு உதாரணம் இந்த கதை. பொருளாதாரத்தில் பின்தங்கிய தன் நண்பன், தன்னை காண நீண்டநேரம் காத்திருந்ததை எண்ணி வருந்திய கண்ணன், சுதாமாவின் கால்களை கழுவி மன்னிப்பு கோரி, அவன் கேட்காமலேயே அவன் தேவைகளை நிறைவேற்றியவன்.